நவம்பர் 20-ல் மலாக்காவில் இடைத்தேர்தல்

தேர்தல் ஆணையம் (இசி) நவம்பர் 20-ம் தேதி, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) தேதியாக அறிவித்துள்ளது என்று அதன் தலைவர் அப்துல் கனி சால்லே இன்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் நவம்பர் 8-ஆம் தேதியும், ஆரம்ப வாக்குப்பதிவு நவம்பர் 18-ஆம் தேதியும் நடைபெறும் என்று அவர் இன்று மலாக்காவில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். பிரச்சார நாளின் காலம் 12 நாட்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி (பிஎன்) தலைமையிலான மலாக்கா அரசு 17 சட்டமன்ற உறுப்பினர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. இதில் அம்னோவைச் சேர்ந்த 14 பேர், பெர்சத்துவைச் சேர்ந்த இருவர் மற்றும் பிஎன்-நட்பு உறுப்பினர் ஒருவர், எதிர்க்கட்சிகள் 11 இடங்கள், டிஏபி-யில் இருந்து எழுவர் மற்றும் பிகேஆர் மற்றும் அமானாவில் இருந்து தலா இருவர் என மலாக்கா சட்டமன்றம் 28 இடங்களைக் கொண்டுள்ளது.

2020-ஆம் ஆண்டில், சபாவில் நடந்த இத்தகையத் தேர்தல் நாட்டில் கோவிட் -19 அலையை அதிகரித்துள்ளது.

நேற்றிரவு நிலவரப்படி, மலாக்காவில் உள்ள பெரியவர்கள் மக்கள் தொகையில் 91.4 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், பிஆர்என் நோக்கத்திற்காக, தேர்தல் ஆணையம் 28 தேர்தல் அதிகாரிகளையும் 80 உதவி தேர்தல் அதிகாரிகளையும் நியமித்துள்ளது என்று அப்துல் கானி கூறியதாகப் பெர்னாமா மேற்கோள் காட்டியது.

வாக்காளர் பட்டியலில் மொத்தம் 495,196 வாக்காளர்கள் உள்ளனர் மற்றும் பிஆர்என் வாக்களிப்பு 70 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இலக்கு வைத்துள்ளது.

அப்துல் கானியின் கருத்துப்படி, வாக்காளர் பட்டியலில் 482,550 சாதாரண வாக்காளர்கள்; 10,191 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள்; 2,349 போலீசார் மற்றும் 106 வெளிநாட்டில் வசிக்கும் வர இய்லாத வாக்காளர்கள் அடங்குவர்.

மலாக்கா பிஆர்என்-இல் எஸ்ஓபி பற்றி கேட்டபோது, ​​வாக்குப்பதிவு நாளில் அதிகமான வாக்காளர்களின் இருப்பைக் குறைப்பதற்காக, தனது தரப்பு இசி அமைப்பு மூலம் வாக்களிக்க வெளியேறும் நேரத்தைப் பரிந்துரைக்கும் என்று அப்துல் கானி கூறினார்.

“வாக்குச்சாவடியில் எஸ்ஓபி கண்டிப்பானது. இரண்டு மருந்தலவு தடுப்பூசி முடித்தல், முகக்கவரி அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடித்த போன்ற நிபந்தனைகள் உள்ளன. எனவே, முதலில் முழுமையாகத் தடுப்பூசிகளையும் முடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், கோவிட் -19 தொடர்பான வழிகாட்டுதல்கள் தேசியப் பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு மற்றும் அரச மலேசியக் காவல்துறை ஆகியவற்றின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் படி வழிநடத்தப்படும் என்று அவர் கூறினார்.