தேசியக் கூட்டணி விரும்பும் இருக்கை இலக்கை ஏற்க முடியாது – அம்னோ

மலாக்கா பிஆர்என் | ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு உருவான கூட்டணியின் நிபந்தனைகள் ஏற்க முடியாத அளவுக்கு இருந்ததை அடுத்து, அம்னோ தேசியக் கூட்டணியை (தே.கூ.) நேரடியாக மலாக்காவில் எதிர்கொள்ள முடிவெடுத்தது.

அம்னோவைச் சார்ந்த இரண்டு உள்நபர்கள் – கட்சித் தலைவருக்கு நெருக்கமான ஒருவர் உட்பட – தே.கூ.-ஆல் குறிவைக்கப்பட்ட மலாய்-பெரும்பான்மை இடங்களின் எண்ணிக்கையில் தங்களுக்குச் சிக்கல் இருப்பதாகக் கூறினர்.

பெயர் கூற விரும்பாத நிலையில் பேசுகையில், அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுப்பினரான (எம்.கே.டி) அவர், தே.கூ.உடனான ஆரம்ப விவாதங்களில் பெர்சத்து எட்டு இடங்களை விரும்புவதாகவும், பாஸ் ஐந்து இடங்களை விரும்புவதாகவும் கூறினார்.

தற்போதைய தேர்தல் எல்லைகளின்படி, மொத்தம் 28 மாநிலச் சட்டமன்ற இடங்கள் மலாக்காவில் உள்ளன.

தே.கூ. என்பது பெர்சத்து, பாஸ், கெராக்கான், பார்டி சோலிடாரிட்டி ரக்யாட் சபா (ஸ்டார்) மற்றும் பார்டி ப்ரோக்ரெசிஃப் சபா (எஸ்ஏபிபி) ஆகியவற்றை இணைக்கும் ஒரு கூட்டணியாகும்.

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு நெருக்கமான ஒரு வட்டாரமும் மலேசியாகினிக்கு இது பற்றித் தெரிவித்தது.

“பாஸ் ஐந்து இடங்களை விரும்புகிறது, பெர்சத்துவுக்கு எட்டு இடங்கள் வேண்டும், மலாக்காவில் 21 மலாய்-பெரும்பான்மை இடங்கள் உள்ளன.

“அம்னோ எட்டு இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும் என்று அர்த்தம் … அது எப்படி முடியும்!” என்றார் அவர்.

இன்னும் இரண்டு மசீச, மஇகா-வுக்கு

2018-இல் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலில், அம்னோ 18 மாநிலத் தொகுதிகளில் போட்டியிட்டது, அதே நேரத்தில் தேசிய முன்னணியில் (தே.மு.) அவர்களின் மற்ற கூட்டாளிகள் மற்ற 10 இடங்களில் போட்டியிட்டனர்.

மலாக்காவில், 23 மலாய் – பெரும்பான்மை இடங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் ஒரு சில, ஒப்பீட்டளவில் அதிக மலாய் அல்லாத வாக்காளர்களுடன் உள்ளன, அவற்றை தே.மு. மசீச மற்றும் மஇகா-வுக்கு வழங்கியது.

இருப்பினும், 2018-இல், மசீச-வும் மஇகா-வும் மலாக்கா மாநில இடங்களை வெல்ல முடியவில்லை.

இதற்கிடையில், பெர்சத்துவை விட, பாஸ்-உடன் வேலை செய்வதில் அம்னோ அதிக ஆர்வம் காட்டுவதாகக் காணப்பட்டாலும், சம்பந்தப்பட்ட கட்சியின் அணுகுமுறை பொறுமைக்குச் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜிஇ-இல், பாஸ் அனைத்து மாநில இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் மசீச மற்றும் மஇகா போன்று, அவர்கள் எந்த வெற்றியையும் பதிவு செய்ய முடியவில்லை.

ஒப்பீட்டளவில் பெர்சத்து ஒரு சிறிய கட்சி என்றாலும், இப்போது அதன் தலைவர்கள் அம்னோவுக்கு இணையாகக் கட்சியை வைக்க முயற்சிக்கின்றனர். அது நிச்சயமாக அம்னோவின் கோபத்தை அழைக்கிறது

அந்த முட்டுக்கட்டை – நவம்பர் 8-ஆம் தேதி நியமன நாளுக்கு முன் தீர்க்கப்படாவிட்டால் – பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தவிர, தேசியக் கூட்டணிக்கு எதிராக, தே.மு. கிடைக்கக்கூடிய அனைத்து 28 இடங்களிலும் அதன் வேட்பாளர்களை நிறுத்தலாம்.

இந்த நிலைமை நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிஆர்என்-இல் மூன்று முனை மோதலை உருவாக்கும்.

மலாக்கா பிஆர்என்-இன் முடிவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது 2023-க்குப் பிற்பகுதியில் நடத்தப்பட வேண்டிய 15-வது ஜிஇ-ஐ எதிர்கொள்ளும் தற்போதைய கட்சிகளின் நிலைப்பாட்டிற்கான ஆரம்ப சமிக்ஞையாக இருக்கலாம்.

எவ்வாறாயினும், வழக்கமாக நாட்டில் ஜிஇ ஒரு காலக்கெடுவை விட முன்னதாகவே நடத்தப்படுகிறது, கலைக்கப்பட்ட தருணம் கடைசி தருணம் வரை இரகசியமாக வைக்கப்படுகிறது, இதனால் எதிர்க்கட்சியை விட அரசாங்கக் கட்சிக்கு ஒரு நன்மை கிடைக்கும்.

மலாக்காவில் தேசியக் கூட்டணியுடன் பணியாற்றலாமா என்று அம்னோ எம்.கே.டி. இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யவில்லை.