`நாகேந்திரனுக்கு மனநலப் பிரச்னை எதுவும் இல்லை` – சிங்கப்பூர் அரசு வழக்கறிஞர்

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக, சிங்கப்பூரில் தற்போது மரணத் தண்டனைக்காகக் காத்திருக்கும் நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர், குற்றத்தைச் செய்தபோது தனது வாடிக்கையாளர் மனநலப் பிரச்னை எதற்கும் ஆளாகவில்லை என்ற அந்நாட்டு உள்துறை அமைச்சின் (எம்.எச்.ஏ) அறிக்கையை விமர்சித்தார்.

மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக, தண்டனையை நிறைவேற்றுவது சர்வதேசச் சட்டத்திற்கு முரணானது என்று என் சுரேந்திரன் வலியுறுத்தினார்.

“முதலாவதாக, சிங்கப்பூர் நீதிமன்றம் நாகேந்திரன் செய்த குற்றங்களுக்கு அவர் மனப் பொறுப்புணர்வைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதைக் கண்டறிந்தது, எனவே அவருக்கு எதிரான தூக்கு தண்டனையை எந்தத் தரப்பும் எதிர்க்கக் கூடாது என்ற உண்மையை எம்.எச்.ஏ. நம்பியுள்ளது.

“இருப்பினும், நாகேந்திரன் எல்லைக்குட்பட்ட அறிவார்ந்த செயல்பாடு மற்றும் அதிவேகத்தன்மை மற்றும் கவனக்குறைவு குறைபாடு (ADHD), IQ மதிப்பெண் 69, மற்றும் அவரது நிர்வாக செயல்பாட்டு திறன்கள் பலவீனமடைந்தது என்று நீதிமன்றம் கண்டறிந்த உண்மையை எம்.எச்.ஏ. வேண்டுமென்றே தவிர்த்தது,” என்று சுரேந்திரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

33 வயதான நாகேந்திரன் சாங்கி சிறைச்சாலையில், மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் கைதியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது, அடுத்த புதன்கிழமை (நவம்பர் 10) அவர் தூக்கிலிடப்பட உள்ளார்.

நாகேந்திரனின் குற்றத்திற்கான மன நலப் பொறுப்பை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல், அவர் செய்வது குற்றம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதாக எம்.எச்.ஏ. கூறியதாக சிங்கப்பூர் ஊடகமான டுடே ஆன்லைன் தெரிவித்துள்ளது.

மன அழுத்தத்தின் பேரில் அவர் அவ்வாறு செய்ததாக, மலேசியா பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதாகவும் எம்.எச்.ஏ. தெரிவித்தது.

42.72 கிராம் ஹெரோயின் கடத்தியதாக நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

லோயர்ஸ் ஆஃப் லிபர்ட்டியின் (எல்.ஃப்.எல்.) ஆலோசகருமான சுரேந்திரன், எம்.எச்.ஏ.-இன் பதிலை “ரோபோடிக்” என்றும் பொதுமக்களின் அக்கறையைத் தொடவில்லை என்றும் விவரித்தார்.

“எந்தவொரு மனம் அல்லது அறிவுசார் ஊனமுற்ற நபர்களுக்குத் தண்டனை நிறைவேற்றுவது சர்வதேசச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். இது மனிதாபிமானமற்றது.

“நாகேந்திரனுக்கு எதிரான இந்தத் தண்டனைக்கு எதிராக, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நியாயமான சிந்தனையுள்ள மக்கள் உண்மையான எதிர்ப்பும் கவலையும் கொண்டுள்ளனர்.

“இதனால்தான், சிங்கப்பூரர்கள் அந்தக் குடும்பத்திற்காக நிதி திரட்டுகிறார்கள், மலேசியர்கள் பொது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

நாகேந்திரனின் மனம் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் குறித்து எம்.எச்.ஏ. கருதவில்லை என்றும் அவர் கூறினார்.

“அதற்குப் பதிலாக, அவர்கள் இரு நாடுகளிலும் சீற்றத்தைத் தூண்டும் வகையில் இவர் போன்றவர்களைத் தந்திரமான குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது, ​​நாகேந்திரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கூப்பை வற்புறுத்துவதற்கான ஆன்லைன் மனுவில் 46,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஹலிமாவுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ மனு வெற்றிபெறவில்லை.

நாகேந்திரன் குடும்பம் கடைசியாக அவரைக் காண, குடியரசுக்கு வர அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூரைச் சேர்ந்த டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (Transformative Justice Collective) என்ற என்ஜிஓ நிதி திரட்டும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மலேசியத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (மாட்பெட்) தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இரண்டு வார அறிவிப்பை விமர்சித்தது.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து  விடைபெறுவதற்கான வாய்ப்பையும் உரிமையையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

42.27 கிராம் போதைப்பொருளின் அளவு – மூன்று தேக்கரண்டிக்கு சமம் – 10 கிலோகிராம் போதைப்பொருளைக் கடத்திய நபர்களுக்கும் அதே தண்டனை வழங்கப்படுவது உட்பட பல பிரச்சினைகளையும் அவர் எழுப்பினார்.

நாகேந்திரனின் மனநலக் குறைபாடு அம்சமும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்றும் குறைந்தபட்சம் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.