3 எஸ்.யு.கே.இ. ஊழியர்கள் இறந்த சம்பவம், நிறுவன இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் – என்.ஜி.ஓ.

கடந்த ஆண்டு, மூன்று தொழிலாளர்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஒரு சம்பவத்திற்கு அலட்சியம் காரணம் என்பதால், மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநருக்கு RM45,000 தண்டம் விதிக்கப்படுவதற்குப் பதிலாக, குற்றவியல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தொழிலாளர் உரிமைக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மார்ச் 22, 2020 அன்று, கோலாலம்பூர், செராஸ், பெர்சியாரன் ஆலம் டாமாய், புஞ்சாக் பன்யான் அருகே உள்ள எஸ்.யு.கே.இ.  உயரடுக்கு நெடுஞ்சாலை கட்டுமான தளத்தில் கந்திரி கிரேன் பாகங்களில் ஒன்று விழுந்ததில், மூன்று சீன நாட்டுத் தொழிலாளர்கள் இறந்தனர், மேலும் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

இன்று ஓர் அறிக்கையில், பல தொழிலாளர் உரிமைக் குழுக்கள், ஸோங்ஷி இன்டர்நேஷனல் சென் பெர்ஹாட்டின் இயக்குநர் மீது, மரணத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடர வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தின.

அக்கூட்டணியின் செய்தித் தொடர்பாளர், சார்லஸ் ஹெக்டர் கூறுகையில், அதன் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தண்டம் மட்டும் விதிப்பது போதாது என்றது.

தண்டம் காரணமாக அந்தப் பொறுப்புதாரிகள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்று அவர் கூறினார்.

“மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மரணம் மற்றும் மற்றொருவருக்குப் (ஓட்டுநர்) பலத்த காயம் ஏற்படுத்தியதாக ஸோங்ஷியின் இயக்குநர்கள் அல்லது அதிகாரிகள் யார் மீதும் குற்றம் சாட்டப்படாததால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

“நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், இயக்குநர்கள், மேலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மீது வழக்குத் தொடரவும், நீதிமன்றத்தில் விசாரிக்கவும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், மரணம் மற்றும் கடுமையான காயம் ஏற்படலாம் என்று தெரிந்திருந்தும், அவ்வாறு நடந்தது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும் என்றார் அவர்.

முன்னதாக, ஸோங்ஷி இன்டர்நேஷனல் சென் பெர்ஹாட் மீது தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 -இன் பிரிவு 15 (1) -இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது RM50,000 -க்கு மிகாமல் தண்டம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நவம்பர் 3 -ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.

அதிகப்படியான சிறை அல்லது தண்டம்

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 -இல் திருத்தங்களை விரைந்து மேற்கொள்ளுமாறு ஹெக்டர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார (திருத்தம்) மசோதா 2020 கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அக்டோபர் 27 அன்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

“இது மக்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. திருத்தம் அதிகபட்ச தண்டத்தை RM50,000 -லிருந்து RM500,000 -ஆக அதிகரிக்கும். திருத்தம் மற்றும் அதன் அமலாக்கத்தை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த அறிக்கையில், அலிரான், ஹைத்தி எக்‌ஷன் கமிட்டி, சஹாபாட் வனித்தா சிலாங்கூர் போன்று 19  உள்ளூர், வெளிநாட்டு அரசுசாரா அமைப்புகளோடு மலேசிய மக்கள் கட்சியும் கையெழுத்திட்டுள்ளது.