மலாக்கா பிஆர்என்-இல் ‘தீவிர’ அமலாக்க நடவடிக்கை – பெர்சே விமர்சனம்

மலாக்கா பிஆர்என் | பிரச்சாரத்தின் போது கோவிட்-19 எஸ்.ஓ.பி.க்களை மீறியதாகக் கூறி, காவல்துறையால் எடுக்கப்படும் “தீவிர அமலாக்க நடவடிக்கை” குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு பெர்சே கவலை தெரிவித்தது.

தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (தொற்றுநோய்க்கான உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) (தேசிய மீட்புத் திட்டம்) ஒழுங்குமுறைகள் 2021 (என்.ஆர்.பி. விதிமுறைகள்) ஆகியவற்றின் கீழ், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்குக் கடுமையான தண்டம் போன்ற நடவடிக்கைகளைப் பெர்சே எடுத்துக்காட்டியது.

“பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) சின்னம் கொண்ட ஜாக்கெட்டை அணிந்து பிரச்சாரம் செய்ததற்காக அலோர் காஜாவில் ஒரு தனிநபருக்கு RM4,000 தண்டம் விதிக்கப்பட்ட சமீபத்திய சம்பவம் அபத்தமானது மற்றும் மூர்க்கத்தனமானது.

“மலாக்காவில் பிஎச் தலைமை மன்றக் கூட்டத்தை, சுகாதார அமைச்சு மற்றும் போலீசார் ‘சோதனை’ செய்ததாகவும், தேர்தல் ஆணைய (இசி) வழிகாட்டுதல்களின் கீழ் கட்சி கூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டபோது மட்டுமே நிறுத்தப்பட்டதாகவும் மற்றொரு அறிக்கை வெளிவந்தது,” என்று பெர்சே ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் தண்டங்கள் இனி கோவிட்-19 தொற்று நிர்வாகத்தைப் பற்றியது அல்ல, மாறாக ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரத்தின் அடக்குமுறையே என்று அந்த அமைப்பு கூறியது.

தேர்தல் என்பது வாக்குப்பதிவு நாளில் மட்டும் வாக்குகளை அளிப்பது அல்ல, மாறாக முழு பிரச்சாரச் செயல்முறையையும் உள்ளடக்கியது என்று அது தெளிவுபடுத்தியது.

சமீபத்திய சம்பவத்தில், புதன்கிழமை ஓர் உணவகத்தில் பிரச்சாரம் செய்ததாகக் கூறி, அரசியல் கட்சி சின்னத்துடன் கூடிய ஆடையை அணிந்திருந்த பிஎச் வேட்பாளர் ஒருவருக்கு மலாக்கா காவல்துறை RM4,000 தண்டம் வழங்கியது.

மலாக்கா மாநிலக் காவல்துறைத் தலைவர் அப்துல் மஜித் முகமட் அலியைத் தொடர்பு கொண்டபோது, ​​வேட்பாளர் அலோர் காஜாவில் நடைபயணத்தில் பங்கேற்றது, மலாக்கா மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) எஸ்ஓபி மீறியதாகக் கண்டறியப்பட்டது.

பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபாஹ்மி ஃபட்ஷில், கட்சி சின்னத்துடன் கூடிய சட்டை அணிந்த நபருக்கு எதிராக, போலீஸ் வழங்கிய தண்டச் சீட்டின் நகலைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு போலிசாரைச் சாடினார்.

பிகேஆர் வேட்பாளர் மச்சாப் ஜெயா லாவ் பின் ஹாவுக்கு எதிராக இந்தத் தண்டம் வெளியிடப்பட்டது என்று ஃபஹ்மி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இத்தகைய “முரட்டுத்தனமான செயல்கள்” ஜனநாயகத்துடன் கூடிய தேர்தலை “தடை” செய்வதாகவும், ஒடுக்கப்படுவதாகவும் கூறினார் – கூட்டாட்சி அரசியலமைப்பின் 8 மற்றும் 10 -வது பிரிவுகள் கூடும் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை மீறுகிறது.

இது தேர்தல் குற்றச் சட்டம் 1954 -ஐயும் மீறுகிறது என்று பெர்சே கூறியது, இதில் பிரிவு 24B -இன் கீழ், ஒரு வேட்பாளர் தான் போட்டியிடும் தொகுதியில் “எந்தவொரு திறந்த கூட்டம், திறந்த பொதுக் கூட்டம், திறந்த பொது கண்காட்சி அல்லது திறந்த பொது பொழுதுபோக்கு அல்லது திறந்த உரைகள் அல்லது விரிவுரைகளை நடத்தலாம், அழைக்கலாம் அல்லது ஏற்பாடு செய்யலாம்.”

கோவிட்-19 தொற்று அதிகரிப்புக்கு எதிரான தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, மலாக்கா மாநிலத் தேர்தல் தொடர்பான அனைத்து நேரடி கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும், தெளிவான மாற்றீடு வழங்கப்படாமல், நேருக்கு நேர் தேர்தல் பிரச்சாரங்கள் மீதான மொத்தத் தடைக்குத் தனது எதிர்ப்பை பெர்சே மீண்டும் வலியுறுத்தியது.

மலாக்காவில் பாதுகாப்பான பிரச்சாரத்தை எளிதாக்குவதற்குத் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்ன என்றும் பெர்சே கேள்வி எழுப்பியது.

“நேருக்கு நேர் பிரச்சாரங்கள் மீதான முழுமையான தடை நீக்கப்பட வேண்டும் மற்றும் தேசிய மீட்புத் திட்டத்தின் 4 -ஆம் கட்டத்திற்கு இணங்க, தெளிவான வழிகாட்டுதல்கள் பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் தயாரிக்கப்பட வேண்டும்,” என்று பெர்சே கூறியது.

இதற்கிடையில், ஆஸ்ட்ரோ அவானி, சினார் ஹரியான் மற்றும் சின் சியூ டெய்லி ஆகியவற்றுடன் இணைந்து “சுவாரா உந்தோக் செமுவா” பிரச்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெர்சே அனைத்துத் தரப்பையும் கேட்டுக்கொண்டது.

இதுவரை, மலாக்காவில் தேர்தல் தொடர்பான நேருக்கு நேர் கூட்டங்களுக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டதால், கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களது பெரும்பாலான செயல்பாடுகளை இயங்கலைக்கு மாற்றவும் அல்லது வெளி மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவும் தேர்வு செய்துள்ளனர்.

நேற்று ஷா ஆலமில் உள்ள ஒரு ஹோட்டலில், பெர்சத்து தலைவர் முஹைதின் யாசின் மற்றும் உறுப்புக் கட்சி தலைவர்கள் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.