‘பாதிக்கும் குறைவானவர்கள் வாக்களித்தால் இசி தலைவர் பதவி விலக வேண்டும்’

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), வாக்குப்பதிவு 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தால், தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் கானி சலே பதவி விலக வேண்டும் என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, அது நடந்தால், தேர்தல் ஆணையம் தனது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டது என்று அர்த்தம்.

“நவம்பர் 20-ம் நாள், வாக்குப்பதிவு நாளில் முடிந்தவரை அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வெளியேறுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்க வேண்டும், ஆனால் அந்த அமைப்பு அதற்கு நேர்மாறாகச் செய்கிறது.

“நவம்பர் 20 -ஆம் தேதி வாக்குப்பதிவு 50% -க்கும் குறைவாக இருந்தால், தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அந்த இஸ்கந்தார் புத்திரி எம்.பி., தேர்தல் ஆணையம் தனது கடமைகளின் வரம்பிலிருந்து விலகிவிட்டதாகக் கூறினார்.

“நேருக்கு நேர் பிரச்சாரங்கள் மீதான தடையை உடனடியாக நீக்கி, கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட எஸ்ஓபி-களுக்கு இணங்க நேருக்கு நேர் பிரச்சாரங்களை நடத்த அனுமதிப்பதன் மூலம் சுதந்திரமான, நியாயமான மற்றும் தூய்மையான தேர்தலை நடத்துவதற்கான அதன் கடமையை அறிந்திருக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

“இந்த முறை மலாக்கா மாநிலத் தேர்தலில் வாக்குப்பதிவு 70% அளவைத் தாண்டியதை உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் கடுமையாக உழைக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.