RM100 மில்லியன் மதிப்புள்ள நிலம், வீடு ஆகியவற்றை நஜிப் கோரினார் – ஜஃப்ருல்

தலைநகரில், RM100 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதற்கு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் இருந்து அமைச்சரவை விண்ணப்பம் பெற்றுள்ளதை நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் உறுதிப்படுத்தினார்.

மக்களவையில் நடந்த தொகுப்பு அமர்வின் போது பேசிய தெங்கு ஜஃப்ருல், வீடுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் 2022 பட்ஜெட்டில் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் பட்ஜெட் விவாதத்திற்குப் பிறகு அந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

“விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன, விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன, இப்போது அமைச்சரவையின் முடிவு இறுதி செய்யப்படுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் சொன்னதாக ஆஸ்ட்ரோ அவானி மேற்கோளிட்டுள்ளது.

முன்னதாக, டாக்டர் மகாதீர் முகமது தெங்கு ஜஃப்ருலிடம், 2022 வழங்கல் மசோதா, நஜிப்பிற்கு வழங்கப்படும் RM100 மில்லியன் சொத்துக்களை ஏன் தொடவில்லை என்பதை விளக்குமாறு கேட்டார்.

இந்த விவகாரம் பிரதமர் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், கேள்வியை அந்தத் துறைக்கும் நீட்டிக்குமாறு ஜஃப்ருல் முதலில் பரிந்துரைத்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விக்குப் பதிலளிக்குமாறு பல முறை கேட்கப்பட்ட பின்னர், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

“இந்த விண்ணப்பம், நான் முன்பு குறிப்பிட்டது போல், பட்ஜெட்டில் இல்லை, ஏனெனில் பட்ஜெட் விண்ணப்பத்திற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டது.

“இதை நடைமுறைப்படுத்த, பின்னர் ஒரு துணை வழங்கல் மசோதாவாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படும்,” என்று அவர் கூறினார்.