சட்டம் வரைதல் சம நோக்குடனும் நியாயமாகவும் நவீனமாகவும் திறமையாகவும் செய்யப்படுவதற்கு உதவ சுயேச்சையாக செயல்படும் சட்டச் சீரமைப்பு ஆணையம் அமைக்கும் திட்டத்தை மலேசிய வழக்குரைஞர் மன்றம் வரவேற்றுள்ளது.
“ஆராய்ச்சிகளையும் பொதுமக்களுடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டு நாடாளுமன்றத்துக்குத் தக்க பரிந்துரைகளைச் செய்ய சுயேச்சையாக இயங்கும் சட்டச் சீரமைப்பு ஆணையம் ஒன்று தேவை என மலேசிய வழக்குரைஞர் மன்றம் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்துள்ளது”, என்று அதன் தலைவர் லிம் சி வீ ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
கடந்த வாரம் பிரதமர்துறை துணை அமைச்சர் லியு வூய் கியோங், டேவான் நெகாராவில் (மேலவையில்) 1933ஆம் ஆண்டு நாடுகடத்தும் சட்டம், 1957ஆம் ஆண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றின் ஒழிப்பு மீதான விவாதத்தின்போது அந்த ஆணையம் அமைக்கப்படுவது பற்றி அறிவித்தார்.
மலேசியாவுக்குச் சட்டச் சீரமைப்புத் தேவை என்பதைத் துணை அமைச்சர் ஒப்புக்கொண்டிருப்பதை வழக்குரைஞர் மன்றம் பாராட்டுகிறது.காமன்வெல்த் நாடுகளில் சட்ட ஆணையம் இல்லாத நாடுகளில் ஒன்று மலேசியா எனக் கூறிய அவர், அதனால் சட்டங்கள் உருவாக்கப்படும்போது பல பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறினார்.
“அந்த ஆணையத்தை அமைப்பதில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் சட்ட ஆணையம், ஆஸ்திரேலிய சட்ட ஆணையம், ஆங்கிலேய சட்ட ஆணையம் போன்றவற்றை முன்மாதிரியாகக் கொள்ளலாம்”, என்று லிம் குறிப்பிட்டார்.
பணி ஓய்வுபெற்ற, பணியில் இருக்கும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்கள், சமூகப் பெருமக்கள் முதலானோர் ஆணையத்தில் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதையும் மன்றம் வரவேற்றது.
லியு கூறுவதுபோல் உத்தேச ஆணையம், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என லிம் குறிப்பிட்டார். இப்போதுள்ள மலேசிய சட்டச் சீரமைப்புக் குழு (எம்எல்ஆர்சி)வில் அடிக்கடி நிகழும் அரசின் குறுக்கீடுகள் அதில் இருக்கக்கூடாது.
ஆணையம் நேர்மையாக செயல்பட்டால் வழக்குரைஞர் மன்றம் நிச்சயம் அதற்கு ஆதரவாக இருக்கும் என்றும் லிம் உறுதி கூறினார்.