வெள்ளப் பேரிடரைச் சமாளிக்கும் விழிப்பு நிலையில் சுணக்கம்!

இராகவன் கருப்பையா – கடந்த வெள்ளிக்கிழமை(18/12) பிற்பகல் தொடங்கிக் குறைந்தது 24 மணி நேரமாக இடைவிடாது பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட பேரிடர் ஒருசில அரசாங்க இலாக்காக்களின் விழிப்பு நிலையை உலுக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதப் பிற்பகுதியில் கிழக்குக் கரை மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் இம்முறை கிளந்தான், திரங்கானு, பஹாங் ஆகிய மாநிலங்களுக்கு அப்பாற்பட்டுப் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா போன்ற மாநிலங்களையும் சூழ்ந்த திடீர் வெள்ளம் எதிர்பாராத பேரிடரை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூரில் குறிப்பாக ஷா ஆலாம், கிளேங், காப்பார், செப்பாங், உலு லாங்ஙாட் போன்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிலைகுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

அனுதினமும் தங்களுடைய சுயலாபத்தையே முன்வைத்து மக்களை இன ரீதியாகவும் மத வாரியாகவும் பிரித்துக் குளிர்காயும் அரசியல்வாதிகளின் மத்தியில் எவ்வித இனப் பேதமுமின்றித் துணிச்சலாகக் களமிறங்கிப் பாதிக்கப்பட்டோருக்கு இரவு பகலாக உதவி செய்யும் பல்லினங்களைச் சார்ந்த நமது இளைஞர்களின் பொதுநலப் போக்கை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது.

ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக உணவு வழங்கும் சீக்கியச் சமூகத்தின் குர்டுவாரா உறுப்பினர்கள் தொடங்கி வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளில் மாட்டிக் கொண்டிருப்போரைக் காப்பாற்றத் தங்களது கனரக வாகனங்களைக் களமிறக்கியுள்ள இந்தியர்களின் போக்குவரத்து நிறுவனங்கள் வரையிலும் மட்டுமின்றிச் சீன, மலாய் இளைஞர்களும் கூடத் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதைப் பார்க்க மிகவும் உணர்ச்சியாக உள்ளது.

உடமைகள், உணவு மற்றும் பாதிக்கப்பட்டுள்ளோரைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல மீட்புப் படகுகள் போன்ற உதவிகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்வதற்குப் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிப்பட்டோரின் தொடர்பு எண்களும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணமாக உள்ளன.

இவ்வளவுக்கும் மத்தியில் இதுபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்கென நிறுவப்பட்டுள்ள அரசாங்க இலாகாக்களை எங்கே காணவில்லை என்பதே மக்களின் பிரதானக் கேள்வியாக உள்ளது.

தீயணைப்புப் படையினரைத் தவிர்த்து மாநகர் மன்றங்கள், நகராண்மைக் கழகங்கள், பேரிடர் உதவி மற்றும் மீட்புப் படையினர் போன்ற அனைத்துத் தரப்பினரும் விரைந்து நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்னும் மக்களின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

இந்த இலாகாக்கள் மட்டுமின்றிக் காவல் துறையின் கடல் பிரிவு மற்றும் ராணுவத்தினரிடமும் கூட ஆயிரக் கணக்கான படகுகள் உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் இதுபோன்ற அவசரங்களுக்கு உடனடியாகப் பயன்படுத்துவதில் சுணக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமான விதிமுறைகள் உள்ளனவா என்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாருமே தற்போது மீட்பு மற்றும் துயர்துடைப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள போதிலும் மேல் மாடிகளிலும் கூரைகளின் மேலேயும மாட்டிக் கொண்டு தவித்தவர்களைக் காப்பாற்றத் தன்னார்வ இளைஞர்கள்தான் முதலில் களமிறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருசில இடங்களில் 20 மணி நேரங்களுக்கு மேல் கூட உணவோ உறக்கமோ இல்லாமல் கூரைகளின் மேல் மாட்டிக் கொண்டு தவித்த மக்களின் பரிதாபகரமான நிலை சமூக வலைத் தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளன.

இப்படி அவதிப்பட்டவர்களில் கைக் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் கூட அடங்குவர். அவர்களைத் தங்களுடைய தோள்களில் சுமந்து பாதுகாப்பாகக் கீழே இறக்கிய தன்னார்வ இளைஞர்களின் தன்னலமற்ற சேவைகள் உண்மையிலேயே அளப்பரியது.

இது போன்ற ஒரு பெரும் வெள்ளத்தை அரை நூற்றாண்டுக்கு முன் நாடு எதிர்நோக்கியது நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த 1971ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நாட்டை வெள்ளக்காடாக மாற்றிய அந்தப் பேரிடரை அப்போதைய பிரதமர் துன் ரசாக் மிகவும் திறமையாகக் கையாண்டார். நாடு முழுமைக்கும் அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்திய அவர் உடனடியாகத் தீவிர மீட்பு மற்றும் துயர்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

வசதிகள் அதிகமாக இல்லாத காலக்கட்டத்திலேயே நிலைமையை மிகவும் திறமையாகச் சமாளித்தது அப்போதைய அரசாங்கம்.

ஆனால் போதிய ஆள்பலமும் உபகரணங்களும் இதர வசதிகளும் நிறைந்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் ஏன் இப்படிப்பட்ட சுணக்கம் ஏற்பட்டது, மக்கள் ஏன் இவ்வளவு சிரமங்களுக்கு ஆளாக வேண்டும் போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்?