பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வசமுள்ள பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் அதன் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பை களம் இறக்க எண்ணியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளந்தான் பாஸ் மாநிலத் தொடர்புக்குழு, அடுத்த பொதுத் தேர்தலுக்கான தொடக்கநிலை வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து விட்டதாக சீன நாளேடான சின் சியு டெய்லி சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிவித்துள்ளது.
அப்பட்டியலின்படி இப்போது குபாங் கிரியான் எம்பியாகவுள்ள சலாஹுடின், பாசிர் மாஸில் களமிறக்கப்படுவார் என்று அது தெரிவித்தது.
வேட்பாளர் பட்டியல் பாஸின் உச்ச அதிகாரப்பீடமான ஷுரா மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
கடந்த பொதுத் தேர்தலில், பாசிர் மாஸில் பாஸ் வேட்பாளராக போட்டியிட்ட இப்ராகிம் அலி அம்னோ வேட்பாளரைத் தோற்கடித்தார். பின்னர் அவர் சுயேச்சை எம்பி ஆனார். மலாய்க்காரர் உரிமைக்காக போராட பெர்காசா அமைப்பையும் தோற்றுவித்தார்.
பாசிர் மாஸில் பாஸ் போட்டியிட முனைந்தால் அம்னோவும் போட்டியில் குதிக்கும் என்பது நிச்சயம். எனவே இம்முறை அங்கு மும்முனைப் போட்டியை எதிர்பார்க்கலாம்