கேஎல்ஐஏ2 மென்மையான மண் பகுதியில் அமைக்கப்பட்டு வருவது ஏன் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார்.
குறைந்த கட்டண விமான நிலையத்தை விரிவு செய்வதற்காக அமைக்கப்படும் கேஎல்ஐஏ2 என்ற விமான முனையத்தை நிர்மாணிப்பதற்கு 2008ம் ஆண்டு புதிய பெருந்திட்டம் வரையப்பட்டது. அதன் விளைவாக அந்தப் பகுதியில் அந்த விமான முனையம் கட்டப்படுவதாக அவர் சொன்னார்.
என்றாலும் அதற்கு முன்னதாக வழங்கப்பட்ட ஒரு திட்டம் மென்மையான மண் பிரச்னை ஏதுமில்லாமல் கட்டப்படுவதற்கு வழி வகுத்ததாக புவா குறிப்பிட்டார்.
கேஎல்ஐஏ2ன் கட்டுமானச் செலவுகள் மதிப்பிடப்பட்ட 1.7 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.6 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ள குறித்த சர்ச்சையின் மையப் பொருளே அந்தக் கேள்வி என அவர் சொன்னார்.
1992ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கேஎல் அனைத்துலக விமான நிலையப் பெருந்திட்டத்தை மேற்கோள் காட்டிய அவர், கேஎல்ஐஏ2ன் கட்டுமான வேலைகளை முடிப்பதற்கான காலக்கெடு 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2013ம் ஆண்டு ஏப்ரலுக்கு நீட்டிக்கப்பட்டதற்கும் கட்டுமானத் தளம் மாற்றப்பட்டதே காரணம் என்றார்.
“கெட்டியான மண் பகுதியிலிருந்து மென்மையான மண் பகுதிக்கு மாறியது ஏன் என போக்குவரத்து அமைச்சரும் மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டும் பதில் சொல்ல வேண்டும். கட்டுமானச் செலவுகள் 2 பில்லியன் ரிங்கிட் கூடியதற்கு அது தான் காரணம்.”
1992ம் ஆண்டு திட்டத்தின் படி, கேஎல்ஐஏ2-யின் நடப்புக் கட்டுமானத் தளம் “களிமண்” பகுதியாகும். அங்கு இரண்டு முதல் மூன்று மீட்டர் ஆழத்துக்கு சதுப்பு நிலப் பொருட்கள் உள்ளன. “எடையைத் தாங்கும் ஆற்றல் அங்கு இல்லை. கணிசமான பொறியியல் வேலைகளை மேற்கொள்ளாமல் அங்கு விமான நிலையத்தைக் காட்டுவதற்கு பொருத்தமாக இருக்காது- அந்த வேலைகளில் வடிகால் வசதிகளை மேம்படுத்துவது, சதுப்பு நிலப் பொருட்களை அகற்றுவது, எடையைத் தாங்கக் கூடிய பொருட்களை கொண்டு மூன்று மீட்டர் ஆழத்துக்கு நிரப்புவது ஆகியவையும் அடங்கும், ,என அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி புவா கூறினார்.
அந்த நிலத்தை பொருத்தமானதாக மாற்றுவதற்கு 1.2 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
ஆங்கிலோ-ஜப்பானிய ஏர்போர்ட் கார்ப்பரேஷன் பெர்ஹாட் வரைந்த அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு ஏற்கனவே குறிக்கப்பட்ட கடினமான மண் பகுதியில் கேஎல்ஐஏ2 கட்டப்படுமானால் அந்த 1.2 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்தியிருக்கலாம்.
1992ம் ஆண்டு திட்டத்தில் குறிக்கப்பட்ட பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். கேஎல்ஐஏ-யின் முதலாவது முனையம் கட்டப்பட்ட நேரத்தில் அந்த இடமும் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும் புவா குறிப்பிட்டார்.
நடப்பு குறைந்த கட்டண விமான நிலையத்துக்குப் பதில் புதிய முனையம் கட்ட வேண்டும் என்பதையோ இடத்தை மாற்றியதையோ நாங்கள் குறையாகக் கூறவில்லை. செலவுகள் கூடிக் கொண்டே போவது பற்றித் தான் கவலைப்படுகிறோம்”, என்றார் புவா
தற்போது குறைந்த கட்டண விமான முனையத்தை ஆண்டுக்கு 15.4 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். அந்த எண்ணிக்கை அதன் ஆற்றலை விட 400,000 அதிகமாகும்.