விலகிக் கொள்ளுங்கள் என சர்ச்சைக்குள்ளான அம்னோ தலைவர்களுக்கு அறிவுரை

அம்னோவுக்குச் சுமையாகி விட்ட கட்சித் தலைவர்கள் தாங்களாகவே விலகிக் கொள்ள வேண்டும் என அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தகையத் தலைவர்கள் விலகிக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளும் வரையில் காத்திருக்கக் கூடாது என்றும் அது அறிவுரை கூறியது.

“மிகவும் சர்ச்சைக்குரியவர்களாகி மாறி கட்சிக்கு சுமையாகி விட்ட தலைவர்கள் – அது தவறோ இல்லையோ- தயவு செய்து சுயமாகவே விலகிக் கொள்ளுங்கள்”, என அந்த மலாய் மொழி நாளேட்டின் முதுநிலை ஆசிரியர் ஜைனி ஹசான் இன்று கூறினார்.

“கட்சித் தலைவருடைய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் தலைவர் என்னும் முறையில் அம்னோ தலைவருக்கு மரியாதை கொடுங்கள். அவர் மீது நம்பிக்கை வையுங்கள். “நான் என் தலைவிதியைப் பிரதமரிடம் விட்டு விடுகிறேன்” என்பது போன்ற அறிக்கைகளை தயவு செய்து இனிமேலும் பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டாம்”.

“முடிவு உங்கள் கரங்களில், பெருமக்களே, தயவு செய்து உங்கள் சொந்த முடிவைச் செய்யுங்கள். தலைவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்,” என ஜைனி தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜைனி யாரையும் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலைத் தான் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது எனக் கருதப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வேட்பாளராக நியமிக்கப்படும் விஷயத்தை கட்சித் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கிடம் விட்டு விடுவதாக செனட்டருமான ஷாரிஸாட் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த அம்னோ பொதுப் பேரவையில் கூறியிருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்

ஜைனி எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு  “13வது பொதுத் தேர்தல்: சுயமாக விலகிக் கொள்ளும் பெருமக்களுக்காக (YB) காத்திருக்கிறது” என்பதாகும்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு புதியவர்களுக்கு வழி விடும் பொருட்டு சுய விருப்பத்தின் பேரில் விலகிக் கொள்ளுமாறு கடந்த பொதுப் பேரவையில் நஜிப் விடுத்த வேண்டுகோளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அம்னோ பேராளர்கள் யாரும் முன் வராதது குறித்து ஜைனி அந்தக் கட்டுரையில் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் அனைவரும் பொறுத்திருந்து பார்க்கும் வழியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் ஆழமாக வேரூன்றி விட்ட தங்கள் பதவிகள் பறி போய் விடும் அல்லது புயல் காற்றில் நிலகுலைந்து விடும் என மிகவும் கவலைப்படுகின்றனர்.”

அந்த பேராளர்கள், புதுமுகங்களுக்கு வழி விடுவதற்காக கூடிய வரை விரைவில் தாங்கள் விலகிக் கொள்வதை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்துசான் மலேசியா முதுநிலை ஆசிரியர் வலியுறுத்தினார்.

அவர்கள் நல்லவர்களாக இல்லை என்றோ நல்லவர்களாக நடந்து கொள்ளவில்லை என்றோ நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். மக்கள் வாக்குகள் மூலம் உங்களை மதிப்பீடு செய்ய அனுமதித்து விடாதீர்கள்.”

“அவர்கள் உண்மையில் அம்னோவை விரும்பினால் கட்சித் தலைவர் தேர்வு செய்வதற்குத் தயவு செய்து உதவுங்கள்”, என ஜைனி மேலும் கூறினார்.