என்எப்சி மீதான புகாரில் மூன்று அமைச்சர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

சர்ச்சைக்குரிய என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூடத் திட்டத்தில் நிதிகளை “முறைகேடாக நிர்வாகம்” செய்யப்பட்டதாகக் கூறப்படுவதின் தொடர்பில் மூன்று  விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர்கள் மீது பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய ஜிங்கா 13 என்னும் அமைப்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி ) புகார் செய்துள்ளது.

2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்த துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட் (2008-2009), நடப்பு விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் ஆகியோரே அந்த மூவர் ஆவர்.

“கடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னர் என்எப்சி-யின் சிறப்புக் கணக்கிற்கு கடன் மாற்றப்பட்டது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகம் என்பதால் அமைச்சும் மற்றும் அந்தத் துறைக்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சர்களுடைய நடவடிக்கைகளை ஜிங்கா 13 கண்டிக்கிறது,” என அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பேரிஷ் மூசா விடுத்த அறிக்கை கூறியது.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே என்எப்சி-க்கான 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதை அண்மையில் பொதுக் கணக்குக் குழு கண்டு பிடித்ததை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.

கடந்த மாதம் சம்பந்தப்பட்ட அமைச்சின் பல அதிகாரிகளை விசாரித்த பின்னர் அந்தத் தகவலை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் அஸ்மி காலித் வெளியிட்டார்.

“நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு மீட்டுக் கொள்ளப்படுவதற்கு அமைச்சின் அங்கீகாரம் தேவைப்படும் சிறப்புக் கணக்கிற்கு அந்தப் பணம் 2009ம் ஆண்டில் மாற்றப்பட்டுள்ளது.”

“ஆனால் 2009ம் ஆண்டு அந்தப் பணம் விநியோகம் செய்யப்பட்ட பின்னர்  ஒராண்டு கழித்து அதாவது 2010ம் ஆண்டில் தான் ஒப்பந்தம் கையெழுத்தானது,” கடந்த நவம்பர் மாதம் பொதுக் கணக்குக் குழு விசாரணைக்குத் தலைமை தாங்கிய பின்னர் அஸ்மி காலித் கூறினார்.

வழக்கமான நடைமுறைகளுக்கு இணங்க பொருத்தமான ஆவணங்கள் இல்லாமல் இவ்வளவு பெரிய பொது நிதி எவ்வாறு மாற்றப்பட்டது என ஜிங்கா 13 கேள்வி எழுப்பியது.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது எம்ஏசிசி விசாரிப்பதோடு குற்றம் புரிந்துள்ளதாகக் கண்டு பிடிக்கப்படுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சொந்தமான என்எப்சி-க்கு கடன் வழங்கியதில் அதிகார அத்துமீறல் ஏதும் நிகழ்ந்துள்ளதா அல்லது சிறப்புச் சலுகை ஏதும் வழங்கப்பட்டதா என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியது.

TAGS: