வரிப்பணத்தை வீணாக்க வழி வகுத்த தேமு-யை  ஜோகூர் மக்கள் தண்டிக்க வேண்டும் – குலா

தேசிய முன்னணி  கூட்டணியில்  ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. ஜோகூர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்த தே மு, இந்த ஓரிரு நாட்களுக்கிடையில்  அந்த நம்பிக்கையை இழந்து இருக்கிறது.

அம்னோ துணைத்தலைவர்  முகமட் ஹாசான் பேசிய தோரணையிலிருந்து பார்க்கும்  போது அம்னோ தன் நிலையை  மறு ஆய்வு செய்துவிட்டதாகத்  தெரிகிறது.

ஜொகூர் மாநில இடைத் தேர்தலில்  வென்றாலும் தோற்றாலும் ,தேசிய முன்னணி  பொதுத்தேர்தலை  நடத்த அழுத்தம் கொடுக்கும்  என்று கூறியிருக்கிறார்.

அதிகார வெறியும், பேராசையும் கொண்ட தேமு-யை தண்டிக்கும் நேரம்  ஜோகூர் மக்களுக்கு  வந்து விட்டது. பொறுப்பற்ற முறையில் மக்கள் நலனைப் பணயம் வைத்து அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க நினைக்கும் இந்த கட்சியை முழுமையாக அரசியல் களத்திலிருந்து நீக்க  இதுவே சரியான தருணம்!

அரசியல் நிலைத்தன்மைக்கு  வேண்டி   ஜோகூர்  சட்டமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல்  நடத்தப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் தேசிய முன்னணி கூறியது. இதுதான் அம்னோவின் நிலைப்பாடு என்றும் கூறப்பட்டது. இந்த உல்டா  கதையை  மக்கள்  நம்பத் தயாராக இல்லை . கோவிட் தொற்று அதிகமாகப் பரவி வரும் இந்தக் கால கட்டத்தில் தேர்தல் தேவை இல்லை என்பதுதான் மக்களின் நிலைப்பாடு.

ஆனால் மாட் ஹாசானின் அறிக்கையைப் பார்க்கும் போது அம்னோவின் இலக்கு அடைய முடியாமல் போகும் போல் தோன்றுகிறது.

வெற்றி அடைய முடியாது என்று கணிக்கும் மாட் ஹாசான், இந்த தேர்தல் நடத்துவது என்பது தேவை இல்லாமல்  பணம் விரயத்திற்கு  இட்டுச் செல்லும் என்று உணரவில்லையா? அதுவும் கூடிய விரைவில்  பொதுத்தேர்தல் வரும் என்ற சாத்தியங்கள் நிறைய  இருக்கும் பட்சத்தில் இந்த இடைத்தேர்தல் தேவைதானா?

அதிகமான மாநில அரசுகளை தன் வசம் வைத்துக்கொண்டு , அதன் வழி அரசு கேந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வரும் பொதுத் தேர்தலில் ஊழல் செய்து  வெற்றி பெற  அம்னோ எண்ணியுள்ளதா?

அம்னோவின் இந்த நினைப்பானது  பொதுத்தேர்தலில் நேர்மையாக போட்டியிட்டு தன்னால் ஜெயிக்கமுடியாது என்பதை  மிகத் தெளிவாக  வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அம்னோ நினைத்தபடி  எதிர்பார்த்த   இடங்களை ஜொகூர் சட்ட சபையில் பெற முடியாமல் தேர்தலுக்கு முந்தைய நிலைக்குப்  போனால் என்ன செய்வார்கள்?அப்படி அது நடந்தால்  இன்னொரு இடைத்தேர்தலுக்கு அடி போடுவார்களா?

இதன் வழி  மிகத் தெளிவாக வாக்காளர்களின் நலன்கள்  சமரசம் செய்யப்பட்டு தேமு – அம்னோ வின் உள் நோக்கம் முன்னிலைப் படுத்தப்படுவது தெரிகிறது.

ஜோகூர் வேட்பாளர்களை  நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான்  .தேசிய முன்னணிக்குத் தயவு செய்து உங்களின் வாக்குகளைப் போடாதீர்!

பேராசை   கொண்ட தேசிய முன்னணி  கோவிட் அதிகமாக  இருக்கும் இக்காலைக்கட்டதில் தேவையில்லாமல் பொதுத்தேர்தல் ஒன்றை  நடத்தி , மலாக்கா இடைத்தேர்தலில் ஜெயித்தது போல் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறலாம்   என்ற  அவர்கள் காணும் பகல் கனவு பலிக்க ஜோகூர் மக்கள் இடமளிக்கக்கூடாது.

உங்கள்  வாக்குகளை அவர்களுக்குச் சாதகமாக ,  தவறாக கையாள  நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. நீங்கள் அவர்களுக்கு வழங்கும் வாக்கு     பொதுத்தேர்தலுக்கு வழி வகுத்து விடும்!

அரசியல்  முதிர்ச்சிக்கும் நாட்டின் நிலைத்தன்மைக்கும் எதிர்க் கட்சிக்கே உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள். இழந்த நமது ஆட்சியை மீண்டும் மீட்டெடுப்போம் என்கிறார் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.