அஜீஸின் ரிம 1.6 கோடி பறிமுதல் விண்ணப்பம் வாபஸ்!

தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமின் மனைவி, டத்தின்ஸ்ரீ கதிஜா முகமட் நூர் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள், மற்றம் அவர்களின் நிறுவனம் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட RM16 மில்லியன் ரொக்கத்தை பறிமுதல் செய்வதற்கான விண்ணப்பத்தை அரசாங்கம் திரும்பப் பெற்றது.

பிரதி அரசு வழக்கறிஞர் நிக் ஹாஸ்லினி ஹாஷிம் இன்று கோலாலம்பூரில் உள்ள உயர்நீதிமன்றத்தில், பிரதிவாதி (அப்துல் அஜீஸின் குடும்பத்தினர்) சமர்ப்பித்த பிரதிநிதித்துவக்  கடிதத்தைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC) விண்ணப்பத்தை திரும்பப் பெற முடிவு செய்ததாக தெரிவித்தார்.

“பிப்ரவரி 15 தேதியிட்ட மற்றொரு கடிதம் (பிரதிநிதித்துவம்) இருந்தது, அதில் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான விண்ணப்பத்தை திரும்பப் பெற AGC ஒப்புக்கொண்டது.”

‘’எனவே, (சொத்துக்களை) விடுவிப்பதற்கான உத்தரவு, அரசு வழக்கறிஞரால் செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

நீதிபதி டத்தோ முஹம்மது ஜமில் ஹுசின், அரசின் விண்ணப்பத்தை ரத்து செய்து, ஜூன் 21ஆம் தேதிக்கு விண்ணப்பித்த விசாரணை தேதியை நீட்டித்து உத்தரவிட்டார்.

அப்துல் அஜீஸ் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர்கள் டத்தோ பிரேம் ராமச்சந்திரன் மற்றும் ஷர்வின் ராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

பிப்ரவரி 8 ஆம் தேதி, நிக் ஹாஸ்லினி, சொத்தை பறிமுதல் செய்வதற்கான அரசாங்கத்தின் விண்ணப்பம் தொடர்பாக பிப்ரவரி 4 அன்று அப்துல் அஜீஸின் குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த பிரதிநிதித்துவத்தை அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC) நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதில் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட பணம் மற்றும் சொத்துக்கள் அடங்கும்.

செப்டம்பர் 2019 இல் தாக்கல் செய்யப்பட்ட ஜப்தி வழக்கில், கதீஜா மற்றும் நான்கு குழந்தைகளான மொஹமட் கைருல் அன்வர், மொஹமட் கைருல் அஸ்மான், கலீதா அஸ்வா மற்றும் கலீதா அஸீரா ஆகியோரின் கணக்குகளில் இருந்து கிட்டத்தட்ட RM16 மில்லியனை அரசாங்கம் பறிமுதல் செய்ய விண்ணப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி, செஷன்ஸ் நீதிமன்றத்தில் அஜீஸ் தொடர்ந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் வரை ஜப்தி நடவடிக்கைக்கு தடை கோரிய குடும்பத்தின் விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்வது தொடர்பான மேன்முறையீட்டு முடிவு வரும் வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.