பி.எஸ்.எம். : ஜொகூர் தொழிலாளர் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்  

பி.ஆர்.என். ஜொகூர் | மலேசியத் தொழிலாளர்கள், குறிப்பாக ஜொகூர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா இஸ்கண்டார் வேட்பாளர் அரங்கண்னல் இராஜு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

இன்று மதியம் நடந்த அச்சந்திப்பில், கட்சியின் தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மா சிவரஞ்சனியும் அவரோடு இருந்தார். தற்போது கட்சி முன்னெடுத்து வரும் தொழிலாளர் நடவடிக்கைகள் சிலவற்றையும் அவர்கள் இருவரும் விளக்கப்படுத்தினர்.

குறைந்த ஊதியம்

இன்னும் RM1,100 அல்லது RM1,200-ஆகவே (57 மாநகரப் பகுதிகளில்) இருக்கும் தேசியக் குறைந்தபட்ச ஊதியம் மிகவும் குறைவானது, இதனால் மலேசியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி தென்கிழக்கு ஆசியாவிலேயே ஆகப் பெரியதாக உள்ளது என சிவரஞ்சனி தெரிவித்தார்.

“குறைந்த ஊதியம் காரணமாக, ஜொகூர்வாசிகளில் பெரும்பாலோர் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர். அதிகரித்துவரும் அன்றாட விலைவாசிக்கு ஏற்ப, குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்த வேண்டும்.

“குறைந்தபட்ச ஊதியம் சுமார் RM1,500 வரை உயர்த்தப்படும் என்று சமீபத்தில் மனிதவள அமைச்சர் அறிவித்தார், ஆனால், அது இன்னும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவில்லை,” என சிவரஞ்சனி சொன்னார்.

அண்மையில், தங்கள் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை RM1,500 ஆக உயர்த்திய வெஸ்ட்போர்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் ஏ.இ.ஓ.என். கோ (AEON Co) தனியார் நிறுவனங்களை மனித வள அமைச்சர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

“ஏன் அரசாங்க நிறுவனங்களும் அரசு சார்புடைய நிறுவனங்களும் ஜொகூரில் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளத்தை RM1,500-ஆக செயல்படுத்தி, மற்ற தனியார் நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக் கூடாது,” என சிவரஞ்சனி கேள்வி எழுப்பினார்.

உதாரணத்திற்கு, ஜொகூர் மாநிலக் கூட்டுறவு (Perbadanan Negeri Johor) சங்கமும் ஜொகூரில் உள்ள பிற அரசு சார்புடைய நிறுவனங்களும் முதலில் இதனைத் தொடங்கலாம் என்று தெரிவித்த அவர், இதனால் ஜொகூர் தொழிலாளர்களின் சுமை குறையும் என்றும் கூறினார்.

வேலை பாதுகாப்பு

அரா என்று அழைக்கப்படும் அரங்கண்ணல், ஜொகூர் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு குறித்து பேசினார்.

“அரசு வளாகங்கள் அல்லது கட்டடங்களான மருத்துவமனைகள், பள்ளிகள், மாவட்ட அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் நீதிமன்றங்களில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களும் பாதுகாவலர்களும் பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்.

“இந்தச் சேவைகள் அரசால் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டவை ஆகும். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தற்காலிக ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறை ஒப்பந்தம் முடிவடையும் போதும், ​​​​பணியாளர் தனது வேலையை இழக்கிறார். ஒருவேளை அவர் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டால், ஒரு புதிய பணியாளராக அவர் மாறுகிறார். இந்தத் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஊதிய நிலையில் B40 குழுவிற்குக் கீழே வாழும் தொழிலாளர்கள் ஆவர்,” என அரா கூறினார்.

இந்த வேலைகள் நிரந்தரத் தேவையானவை, ஆனால் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படிகின்றன என அவர் வருத்தம் தெரிவித்தார்.

“1996-க்கு முன்பு வரையில், இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் அரசாங்க ஊழியர்களாக இருந்தவர்கள், ஆனால் தனியார்மயமாக்கல் கொள்கை இந்தத் தொழிலாளர்களுக்குப் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

“இவர்கள் மட்டுமின்றி, சேவைகள், தொழிற்சாலை மற்றும் உற்பத்தித் துறை தொழில்கள் கூட நீண்டகால தேவையாக இருந்தாலும், அவை தற்காலிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் நிகழ்கின்றன.

“இந்தப் போக்கு கவலைக்குரியது, ஏனெனில் இதனால் ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லாமல் போகிறது, இந்நிலை ஜொகூரில் பரவலாக காணப்படும் ஒன்று. ஒப்பந்த முறையை ஒழிக்கவும், இந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கவும் பி.எஸ்.எம். நீண்ட காலமாகப் போராடி வருகிறது.” என்றார் அவர்.

கிக் ஊழியர்கள்

ஜொகூர் மட்டுமின்றி, உலகெங்கிலும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழிலாளர் குழுக்களான கிராப், ஃபுட்பாண்டா மற்றும் ஆன்லைன் தளங்களில் இயங்கும் பிற சேவைகள் (கிக்) குறித்தும் பி.எஸ்.எம். வேட்பாளர் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“இந்த வேலைகள் சுலபமானவை, எளிதில் வருமானம் ஈட்டக்கூடியவை என அதில் ஈடுபடாதவர்கள் எண்ணுகின்றனர்.  ஆனால், உண்மை என்னவென்றால், தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில், அதிகம் ஒடுக்கப்படும் தொழிலாளர் குழுக்களில் ஒன்றாக இவர்களும் உள்ளனர்.

“முதலாளிகளுடனான அவர்களின் உறவு ஒரு ‘பங்குதாரர்’ அல்லது ஒரு ‘சுதந்திரமான’ ஒப்பந்தக்காரர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், பில்லியன் கணக்கான இலாபம் சம்பாதிக்கும் கிரேப் (Grab) மற்றும் ஃபூட்பண்டா (Foodpanda) போன்ற நிறுவனங்கள், இவர்கள் வழங்கும் சேவைகளுக்கு ஒரு சிறிய கமிஷன் மட்டுமே கொடுக்கிறது.

“இதில் வருத்தத்திற்குரிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தக் குழுவினருக்கு வேலை பாதுகாப்பு இல்லை. இவர்கள் அனைவரும் ‘தொழிலாளர்’ என்று அழைக்கப்பட வேண்டும்; தொழில் சட்டம் 1955-இன் கீழ் இவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்,” என்றார் அரா.

அதற்காக பி.எஸ்.எம். ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது என்று அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

“கிக் ஊழியர்களின் புகார்களைக் கையாள்வதற்கும், அவர்களின் உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்வதற்கும் முறைசாரா ஊழியர் வலையமைப்பு (Jaringan Pekerja Tidak Formal – JPTF) எனும் அமைப்பு ஒன்றினை பி.எஸ்.எம். உருவாக்கியுள்ளது. இதன்வழி ஊழியர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் களமிறங்கியுள்ள அரா சொன்னார்.