சிலாங்கூருக்கு மேலும் ரிம160 M நிதி – சட்டசபை ஒதுக்கியது

இதற்கு முன் வழங்கப்படாத நிதி ஒதுக்கீட்டிற்காக சிலாங்கூர் சட்டசபை ரிம160 மில்லியன் கூடுதல் துணை நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவை நேற்று தாக்கல் செய்தபோது, நவம்பர் 26 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவு திட்டம்  2022 ஆம் ஆண்டில் மாநில இயக்கச் செலவினங்களுக்காக ரிம 2.2 பில்லியன்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

தற்போதைய நிதி தேவைகளின் அடிப்படையில், குறிப்பிட்ட துறைகளின் பயன்பாட்டுக்கான ஒதுக்கீட்டில் பற்றாக்குறை உள்ளது என்றார்.

இந்த ஒதுக்கீட்டில் ரிம150 மில்லியன் ‘சிலாங்கூர் எழுச்சி’ முனைப்புக்கும், மாநில வீட்டுக் கடன் நிதியின் உச்சவரம்பை அதிகரிக்கத் தேவையான மற்றொரு ரிம10 மில்லியனையும் உள்ளடக்கும் என்று அமிருடின் கூறினார்.

கடந்த ஆண்டு மாநிலத்தை தாக்கிய பெருமளவிலான வெள்ளத்திற்கு பிறகு மக்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்கான முயற்சிகளை ஈடுகட்ட கூடுதல் செலவு தேவைப்படும் என்று அமிருடின் கூறினார்.

மாநில சட்டசபை கூட்டம் வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்குகிறது.