பிஎஸ்சி சந்திப்பு: பெர்சே பிரதிநிதிக்கு தடை

தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்ற சிறப்புக்குழு (பிஎஸ்சி) பெர்சே 2.0 அதன் பரிந்துரைகளைத் தாக்கல் செய்வதற்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அதன் பிரதிநிதி வருத்தம் தெரிவித்தார்.

பெர்சே 2.0 வழிகாட்டி குழுவின் உறுப்பினர் டாக்டர் தோ கின் வூன் அவரின் எட்டு-கூறு பரிந்துரையைத் தனிப்பட்ட நபர் என்ற முறையில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

எல்எல்ஜி கலாச்சார மேம்பாடு மையத்தின் தலைவரும், பினாங்கு மாநில ஆட்சிக்குழு முன்னாள் உறுப்பினருமான தோ, தமது தகுதி குறித்து பிஎஸ்சி தலைவர் மேக்சிமஸ் ஓங்கீலி எழுப்பிய கேள்வியால் வருத்தமடைந்தார்.

“நான் பெர்சே 2.0 ஐ பிரதிநிதிக்கின்றேனா என்பது குறித்து தாம் நிச்சயமற்றவராக இருப்பதாக கூறிய அவர், என்னை நிராகரித்தார்” என்று தோ செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன் ஏனென்றால் நான் பெர்சே வழிகாட்டி குழு உறுப்பினர் என்பதோடு நான் பினாங்கிலிருந்து வருகிறேன். எங்களுடைய எட்டு-கூறு திட்டத்தைத் தாக்கல் செய்ய என்னை அனுமதித்திருக்க வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

தனது கருத்தைத் தெரிவிக்க பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்ட தோ, வாக்காளர்கள் இயல்பாகவே பதிவு செய்துகொள்வதை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், வாக்காளர்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்டவில்லை என்றால் இதனால் பயனில்லை என்று பதில் அளித்தார் ஓங்கீலி.

“வாக்காளர்களின் அக்கறை தனிப்பட்ட விவகாரம். (பரிந்துரையை செயல்படுத்தாதற்கு) அதை காரணமாக பயன்படுத்தக்கூடாது.

“ஒவ்வொருவரும் வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதற்கு உரிமை உண்டு. அவர்கள் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்வதை இசி உறுதி செய்துகொள்ள வேண்டும் … கட்டாய வாக்களிப்பை கூட நாம் அமல்படுத்தலாம்”, என்று தோ மேலும் கூறினார்.

பெர்சே 2.0 பிரதிநிதிகள் தனிப்பட்ட நபர்கள் என்ற தகுதியில் பேச வேண்டும், “பெர்சேயின் சார்பில் அல்ல. ஆனால் அவர்கள் அதன் கருத்தைப் பிரதிபலிக்கலாம்”, என்று கடந்த மாதத்தில் ஓங்கீலி கூறியுள்ளார்.

பெர்சே 2.0 இன் தலைவர் அம்பிகாவும் அதன் வழிகாட்டி குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லாவும் தாங்கள் தடை செய்யப்பட்டுள்ள கூட்டணிக்காக பேசுவதாக கூறிய போது ஓங்கீலி இதனை வலியுறுத்தினார்.