தாயிப் மாஹ்முட் ஊழல் விசாரணை மீது எம்ஏசிசி மௌனம் சாதிக்கிறது

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டுள்ள விசாரணையின் நடப்பு நிலை குறித்து கருத்துரைக்க அதன் முதுநிலை அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

காட்டுவள நிர்வாகம், நீடித்த மேம்பாட்டில் ஊழல் பற்றி விவாதிப்பதற்காக மலேசிய அனைத்துலக வெளிப்படை நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஒன்றில் கலந்து கொண்டிருந்த அந்த ஆணையத்தை சேர்ந்த விசாரணைப் பிரிவு துணை ஆணையர் அஸ்மி முகமட் அவ்வாறு மறுத்துள்ளார்.

அந்த நிகழ்வில் கேள்வி பதில் நேரத்தின் போது தாயிப் மீது எம்ஏசிசி நடத்தும் ஆய்வின் நிலை பற்றி மலேசியாகினி அஸ்மி-யிடம் வினவியது.

அதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்மி,”மிகவும் விவரமான கேள்விகள”‘ தாம் ஏற்கப் போவதில்லை  என அந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகச் சொன்னார்.

“நான் சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டேன் என ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளேன். நான் பதில் அளிக்க முடியாத கேள்விகள் இவை”, என அவர் சொன்னார்.

அந்தப் பிரச்னை மீது விளக்கமளிப்பதற்குத் தாம் சரியான நபர் இல்லை எனக் குறிப்பிட்ட அஸ்மி, தாயிப்பை  எம்ஏசிசி இன்னும் விசாரிக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என தலையை அசைத்தார்.

சரவாக் முதலமைச்சருக்கு எதிராக சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை, குறிப்பாக அந்த மாநிலத்தில் வெட்டுமர நிறுவனங்களுக்கு  வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் தொடர்பாக, எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொண்டு வருவதை கடந்த ஜுன் மாதம் எம்ஏசிசி தலைமை ஆணையர் அபு காசிம் முகமட் உறுதி செய்தார்.

ஊழல் குறியீட்டில் மலேசியாவின் நிலை சரிவது குறித்தும் கருத்துரைக்க மறுப்பு

அனைத்துலக வெளிப்படை நிறுவனம் வெளியிட்ட ஊழல் குறியீட்டில் மலேசியாவின் நிலை தொடர்ந்து சரிந்து வருவது பற்றியும் அவரிடம் வினவப்பட்டது.

இந்த ஆண்டு அந்தக் குறியீட்டில் 128 நாடுகளில் 60வது இடத்தில் மலேசியா வைக்கப்பட்டுள்ளது. அந்த நிலை கடந்த தசாப்தத்தில் மிக மோசமான நிலை ஆகும்.

அந்த விவகாரம் பற்றிப் பேசுவதற்குத் தாம் “சரியான மனிதர்” இல்லை என அஸ்மி மீண்டும் கூறினார்.

அனைத்துலக வெளிப்படை நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி ஊழல் குறியீட்டை வெளியிடுகிறது. “பெரிய அளவில் நிகழும் ஊழலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறி விட்டதே ஊழல் குறியீட்டில் மலேசியாவின் நிலை சரிவதற்குக் காரணம் என்று அனைத்துலலக ஊழல் கண்காணிப்பு அமைப்பு கூறியது.”

தாயிப்பும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை ஆறு நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக அரசு சாரா அமைப்புக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் தேசிய போலீஸ் படைத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளன.

அந்த அமைப்புக்களில் புருனோ மான்செர் நிதி, பசுமை அமைதி, பெர்ன் என்ற காட்டு வளக் கண்காணிப்பு அமைப்பு ஆகியவையும் அடங்கும்.

அந்தக் கடிதத்தில் தாயிப் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக பொது நிதிகளும் அரசாங்க அதிகாரமும் அரசாங்க நிலமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது, மோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

332 மலேசிய நிறுவனங்களிலும் 85 அந்நிய நிறுவனங்களிலும் மொத்தம் பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை தாயிப்பும் அவரது குடும்பமும் வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.

14 மலேசிய நிறுவனங்களில் மட்டும் அந்தக் குடும்பத்துக்கு 4.65 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பங்குகள் இருப்பதாகவும் அந்த அரசு சாரா அமைப்புக்கள் கூறிக் கொண்டன.