மலேசியாவில் இளநிலை பட்டதாரிகளில் பாதிப்பேருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைப்பதில்லை என்று இணையத்தள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வருகிறது.
பட்டதாரிகள் (73விழுக்காடு) பொதுவில் ரிம1,800-இலிருந்து ரிம2,100வரை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் அவர்களில் 54 விழுக்காட்டினருக்குத்தான் அது சாத்தியமாகிறது என்றும் அவ்வாய்வு கூறுகிறது. 35 விழுக்காட்டினர் ரிம1,800-க்கும் குறைவாகத்தான் சம்பளம் பெறுகின்றனர்.
டிப்ளோமா (பட்டயப் படிப்பு) வைத்திருப்பவர்களில் 37 விழுக்காட்டினர் ரிம1,200 அல்லது அதற்கும் குறைவாகவே சம்பளம் பெறுகிறார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பது(67விழுக்காடு) ரிம1,200க்கும் ரிம1,800க்கும் இடைப்பட்ட ஒரு தொகையை.
1,830 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 10-இல் மூவர்(29விழுக்காடு) எதிர்பார்த்த சம்பளம், சலுகை இல்லை என்பதால் கிடைத்த வேலையை ஏற்கவில்லை.
இந்த ஆய்வை நடத்தியது JobStreet.com. நவம்பர் மாதம், 19க்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடையே அது நடத்திய ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அக்டோபர் மாதம் அது மேற்கொண்ட ஓர் ஆய்வில் புதுப் பட்டதாரிகள் “பொருத்தமற்ற சம்பளங்கள் அல்லது சலுகைகளைக் கேட்பதுதான்” அவர்களுக்கு வேலை கிடைக்காததற்கு முக்கிய காரணம் என்று 571 ஆள்சேர்ப்பு அதிகாரிகள் கூறியிருந்ததை அடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
“கடுமையான போட்டியால்” வேலை கிடைப்பதில்லை என்று கூறப்படுவதை அவர்கள் ஏற்கவில்லை.
புதுப்பட்டதாரிகளிடம் குறிப்பிட்ட சில திறன்கள் இல்லாதிருப்பதும் வேலை கிடைக்காதிருப்பதற்கு இன்னொரு காரணமாகும்.
அவர்களிடமுள்ள குறைகளில் ஒன்று, ஆங்கிலம் நன்றாக எழுதபேசத் தெரியாதிருப்பது. இது வேலை கிடைப்பதற்குப் பெரும் தடையாக உள்ளதை புதுப்பட்டதாரிகளில் 23 விழுக்காட்டினர் ஒப்புக்கொள்கிறார்கள்.
22 விழுக்காட்டினர், தொடர்புகொள்ளும் திறன் இல்லாதிருப்பதால் வேலை கிடைக்கவில்லை என்றனர்.
இவற்றின் விளைவாக இவ்வாண்டில் இளநிலைபட்டம் பெற்றவர்களில் 65விழுக்காட்டினரும் டிப்ளமோ வைத்திருப்போரில் 59 விழுக்காட்டினரும் இன்னும் வேலை இல்லாதிருக்கிறார்கள்.
ஆய்வில் பங்குகொண்டவர்களில் பெரும்பகுதியினர் (70விழுக்காடு) பட்டம்பெற்று மூன்று மாதங்களே ஆகின்றது.
அதே நேரத்தில், 773புதுப் பட்டதாரிகளில் 74 விழுக்காட்டினருக்கு மூன்று மாதங்களிலேயே வேலை கிடைத்திருக்கிறது, இன்னொரு 16 விழுக்காட்டினருக்கு படிப்பை முடிக்குமுன்னரே வேலை காத்துக்கொண்டிருந்தது.