ஆட்சியாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர்

மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 119வது பிரிவின் திருத்தம், ஆட்சியாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று புத்ராஜெயாவில் விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் (Wan Junaidi Tuanku Jaafar), கூறுகையில், இந்தத் திருத்தங்கள் ஆட்சியாளர்கள், அவர்களது மனைவி மற்றும் அவர்களது வாரிசுகள் வாக்காளர் பட்டியலில் தானாகச் சேர்வதிலிருந்து விலக்கு அளிக்கும் என்றார்.

“இருப்பினும், ஆட்சியாளர்களின் மாநாட்டின் ஒப்புதலுடன் யாங் டி-பெர்டுவான் அகோங்கின் முடிவை  பொறுத்தே (வாக்காளராக இருக்க வேண்டுமா) இல்லையா என்பதைத் தேர்ந்தெடுப்பது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

58 மக்கள்வை உறுப்பினர்களில் 50 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, உறுப்புரை 119 ஐ திருத்துவதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல், 2019 இல் நிறைவேற்றப்பட்ட Undi18 எனப்படும் சட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 21 அன்று நாடாளுமன்றத்தில் சட்டப்பிரிவு 119 பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஆட்சியாளர்களின் மாநாட்டில் இருந்து கருத்துக்களைப் பெறுவதற்கு மார்ச் 10 வரை எடுத்ததாக வான் ஜுனைடி விளக்கினார்.

அடுத்த கட்டமாக, இந்த மசோதா அரச ஒப்புதலைப் பெற்று சட்டமாக மாற்றப்படும் என்று வான் ஜுனைடி கூறினார்.

“ஒவ்வொரு மாநிலத்துக்கும் விதிவிலக்குகளின் முழுமையான பட்டியல், ஆட்சியாளர்கள் மாநாட்டின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அரசிதழில் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.