ஓராங் அஸ்லிகள் ஜோகூர் சட்டமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

நேற்று ஜோகூர், கோத்தா இஸ்கண்டரில், ஜோகூர் சட்டமன்றத்துக்கு வெளியில் நூற்றுக்கணக்கான ஓராங் செலேத்தார்-கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோகூர் நீரிணையை ஒட்டியுள்ள தங்கள் பாரம்பரிய நிலங்கள் இஸ்கண்டர் மலேசியா திட்ட மேம்பாட்டாளர்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

எட்டு கிராமங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலை மணி 11-க்கு மாநில சட்டமன்றத்துக்கு வெளியில் திரண்டு அங்கிருந்து ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மானிடம் மகஜர் ஒன்றை வழங்க சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தை நோக்கிச் சென்றனர்.

சுலோகங்களை முழங்கியபடியும் பாரம்பரிய பாடல்களைப் பாடிக் கொண்டும் அவர்கள் மந்திரி புசாரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

ஓராங் செலேத்தார்கள் ஓராங் லாவுட் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர்களே தென் ஜோகூரின் பூர்விகக் குடிகள். இவர்கள் சுங்கை ஜோகூர், சுங்கை பூலாய் ஆகிய பகுதிகள் வசித்து வருகிறார்கள்.

தங்கள் நிலம் “தங்களுக்குத் தெரியாமலும் தங்கள் அனுமதியின்றியும்” இஸ்கண்டர் பகுதி மேம்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிருப்தி அடைவதாக அவர்களின் பேராளர் ஒருவர் நேற்று ஒர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேம்பாடு என்ற பெயரில், ஓராங் செலேத்தார் தங்கள் பிழைப்புக்கு நம்பியுள்ள கடலோரப் பகுதிகள் அழிக்கப்பட்டு நீர்ப்பகுதிகள் மாசுபடுத்தப்பட்டுள்ளன என்றாரவர்.

“எங்கள் முன்னோர்கள் புதைக்கப்பட்டிருக்கும் மயானப் பகுதியான கம்போங் பக்கார் பத்து இப்போது ஒரு பொது நிறுவனத்தின் சொத்தாக மாறியுள்ளது.

“அது இஸ்கண்டர் இன்வெஸ்ட்மெண்ட் பெர்ஹாட்டின் துணை நிறுவனமாகும்.எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?”, என்றந்த மகஜர் வினவியது.

“சுங்கை ஸ்கூடாய் முகத்துவாரத்தில் பூலாவ் கிச்சில் என்று நாங்கள் அழைக்கும் இடத்தில் ஆடம்பர பங்களா கட்டப்பட்டுள்ளது.முன்பு அங்கு காண்டா காடு இருந்தது.எங்களுக்குத் தேவையானதெல்லாம் அங்கு கிடைத்து வந்தது.”

அப்பகுதியில் “கட்டுப்பாடில்லாமல் மேம்பாட்டு”ப்  பணி மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அம்மகஜர், தங்களுக்குரிய நிலத்தில் அரசமைப்புக்கு விரோதமாக அத்துமீறல் நிகழ்ந்திருக்கிறது என்றும் அதை “ஏற்பதற்கில்லை” என்றும் கூறியது.

“ஓராங் செலாத்தார்கள்தான் ஜோகூரின் பூர்விகக் குடிகள். எங்கள் பாரம்பரிய நிலம் எங்களுக்கே உரியது. நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் போலவோ  குடியேறிகள் போலவோ நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.”

சுமார் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக ஓராங் செலாத்தார் பிரதிநிதி தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் காத்திருந்தபின், ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அஹ்மட் ஜஹ்ரி ஜமில் அவர்களைச் சந்தித்தார். அவரிடம் மகஜர் ஒப்படைக்கப்பட்டது.

“அவர் அதிகம் பேசவில்லை.மகஜரை மந்திரி புசாரிடம் ஒப்படைப்பதாக உறுதி கூறினார்.”

சட்டமன்ற மாற்றரசுக் கட்சித் தலைவரும் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினருமான பூ செங் ஹாவும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் என அவர் சொன்னார்.

ஆர்ப்பாட்டம் பிற்பகல் மணி 1.30க்கு அமைதியாக முடிவுக்கு வந்தது.