மங்கோலியரான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணைக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து காணாமல் போன அப்துல் ரசாக் பகிந்தா, நேற்றிரவு கோலாலம்பூரில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் காணப்பட்டார்.
அந்த வழக்கில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேல் படிப்புக்காக லண்டனுக்குச் சென்றார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற அப்துல் ரசாக், மலேசிய ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் கழகம் நடத்தி வருகிற “சிறிய அம்சங்கள், பெரிய விஷயங்கள்” என்னும் தலைப்பிலான தொடர் உரையில் அவர் கலந்து கொண்டு பேசினார். ஜாலான் இம்பியில் உள்ள வங்கி அதிகாரிகள் மன்றத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது.
அந்தக் கழகத்தின் இணையத் தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அந்த உரை மலேசியா இன்று எதிர்நோக்கும் சமய, அரசியல் சவால்கள்” என்பது பற்றியதாகும். அந்த நிகழ்வுக்கு 60 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
சர்ச்சைக்குரிய இரண்டு ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கிகள் கொள்முதலில் தரகராக செயல்பட்ட பெரிமெக்கார் சென் பெர்ஹாட்டின் தலைவராக அப்துல் ரசாக் இருந்த அப்துல் ரசாக், அந்தக் கொள்முதலில் தமது ஈடுபாட்டைத் தற்காத்துப் பேசியதாகத் தெரிய வருகிறது.
கேள்வி பதில் நேரத்தின் போது பேசிய அப்துல் ரசாக், அந்த நீர்மூழ்கிக் கொள்முதல் விவகாரம் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது எனக் கூறியதாகவும் நம்பப்படுகிறது.
சாத்தாம் ஹவுஸ் விதிமுறை அமலாக்கப்பட்டதால் கேள்விகளையும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களையும் வெளியிடக் கூடாது.
தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் திறந்த மனதுடன் பேசுவதற்கும் ஊக்கமளிக்கும் பொருட்டு சாத்தாம் ஹவுஸ் விதிமுறை அமலாக்கப்படுகிறது.
ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கடந்த கால, நிகழ் கால உறுப்பினர்களுக்கும் மலேசியாவுக்கும் இடையில் சமூக, பொழுதுபோக்கு, பண்பாட்டு நடவடிக்கைகளை மலேசிய ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் கழகம் அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதற்கு முன்னதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய அமைதி அற நிறுவனத்தின் இயக்குநர் என்னும் முறையில் அப்துல் ரசாக் இந்த வட்டாரத்தில் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.
அவர் தற்போது ஆக்ஸ்போர்ட், செயிண்ட் அந்தோனி கல்லூரியில் முதுநிலை இணை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கி ஊழல் விவகாரம் இப்போது பிரஞ்சு நீதிமன்றங்களை எட்டியுள்ளது. டிசிஎன் என்ற பிரஞ்சு இராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனம் பெரிமெக்காருக்குக் கொடுத்ததாகக் கூறப்படும் கையூட்டுக்கள் தொடர்பில் அந்த நிறுவனத்துக்கு எதிராக சுவாராம் சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு இப்போது விசாரணைக்காக காத்திருக்கிறது.