எதிர்க்கட்சியாக இருக்க வேண்டாம்,அதிகாரத்தை கைப்பற்றுங்கள்  – சைபுடின்

அடுத்த பொதுத் தேர்தலில்  “எவ்வழியிலாவது” ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும், சகதோழர்கள்  கூறியது போல “கண்ணியத்துடன்” எதிர்க்கட்சியாக இருக்க வேண்டாம் என்றும் பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுதின் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியும் பக்காத்தான் ஹராப்பானும் தேர்தல் வெற்றியில் அதீத நம்பிக்கை கொள்ளக்கூடாது என்றும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முன் இரண்டு தேர்தல் சுழற்சிகளுக்கு காத்திருக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்சித் தோழர்களின் சமீபத்திய அறிக்கைகளால் தாம் ஏமாற்றமடைந்ததாக அவர் கூறினார்.

நேற்று முந்தினம் நடந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பேசிய சைபுடின், பிகேஆர் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை என்றும் தொடர்ந்து போராடும் என்றும் அவர் கூறினார்.

“பாரிசான் நேஷனலின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்முடைய  நாட்டின் வளங்களைத் திருடுபவர்கள் (கிளெப்டோக்ராட்கள்) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்தால், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஊழல், அரசு நிதி மோசடி மற்றும் விரயம் அல்லது நிர்வாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும்?

“அதனால்தான் நாம் GE15ல் எந்த வகையிலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

PKR மற்றும் PHன் பொதுத் தேர்தல் வாய்ப்புகள் குறித்து துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி மற்றும் முன்னாள் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர் ஆகியோர் சமீபத்திய அறிக்கைகளை அடுத்து சைபுதீனின் கருத்துக்கள் வந்துள்ளன.

பிகேஆர் வெற்றியை இலக்காகக் கொள்ளாமல், அதற்குப் பதிலாக “கண்ணியத்துடன்” எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தால், பொதுத் தேர்தலில் கட்சிக்கு ஆதரவளிக்க மற்ற காட்சிகளை கவருவது பிகேஆரால் சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.

“தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை மட்டுமே மற்ற கட்சிகள்  ஆதரிப்பார்கள்.வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருந்தால் அவர்கள் பிகேஆர் பக்கம் சாய்வார்கள்,” என்று சைபுடின் கூறினார்.

“அதனால்தான்,பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி நாம் எதை உணர்ந்தாலும், பகுப்பாய்வு செய்தாலும் அதை நாம் கட்சிக்குள் வைத்திருக்க வேண்டும், அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

“வாக்காளர்களுக்கு நம்பிக்கை மற்றும் வெற்றியின் மனநிலையை நாம் ஊட்ட வேண்டும். அதுவே சரியான உத்தியாக இருக்கும்.”

இந்த மாத தொடக்கத்தில், எதிர்க்கட்சிக் கூட்டணி அதன் வாய்ப்புகளைப் பற்றி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றும், வெற்றியில் அதீத நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்றும் ரஃபிஸி கூறினார். “கண்ணியத்துடன்” எதிர்க்கட்சியில் நீடிப்பதே PKR மற்றும் PH க்கு நல்லது. ஒரு தனி நிகழ்வில், நூருல் இசா, புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கு PH க்கு குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது இரண்டு பொதுத் தேர்தல்கள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு சைபுடினும் ரபிசியும் போட்டியாளர்களாக உள்ளனர்.

-freemalysiatoday