பாஸ் “கட்சியின் போராட்டத்துக்கான” தமது பற்று உறுதியை முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வேட்பாளராக நியமிக்கப்படும் விஷயத்தை “பெரிதுபடுத்துவதை” நிறுத்திக் கொள்ளுமாறு அவர் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டார்.
“பாஸ் தலைவர்களுடைய பதில்களினால் என் கோட்பாடுகள் மருட்டலுக்கு இலக்காகவில்லை.”
“13வது பொதுத் தேர்தலில் நான் நிறுத்தப்படுகின்றோனோ இல்லையோ அந்த விஷயம் பெரிதாக்கப்படக் கூடாது.”
“பாஸ் கட்சியின் அமைப்பு விதிகளில் பொறிக்கப்பட்டுள்ள பாஸ் போராட்டத்துக்கு நான் தொடர்ந்து விசுவாசமாக இருப்பேன்,” என ஹசான் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சித் தலைமைத்துவத்திலிருந்து வெளியாகியுள்ள “ஆதாரமற்ற அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் கருத்துக்களுக்கும்” பதில் அளிப்பதற்காக தாம் விரைவில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும் மாநில ஆட்சி மன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
ஹசான் “அம்னோ பல்லவிக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருப்பதாக” பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும், ஹசான் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமாரும் கூறியுள்ளதற்கு ஹசான் பதில் அளித்தார்.
அம்னோ-பாஸ் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவாக இருக்கும் பாஸ் பிரிவு ஒன்றுடன் ஹசான் இணைத்துப் பேசப்பட்டு வருகிறார்.
அத்துடன் மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்தும் பணியை மேற்கொள்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கினால் நியமிக்கப்படுவதற்கு தாம் விரும்புவதாகவும் கடந்த திங்கட்கிழமை ஹசான் கூறிய பின்னர் அவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
ஹசானுக்குப் போதுமான நியமனங்கள் கிடைக்காததால் அவர் தமது கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மீண்டும் போட்டியிட முடியாமல் போகலாம் என ஏற்கனவே சிலாங்கூ பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் சாஆரி சங்கிப் கூறியிருந்தார்.
என்றாலும் ஹசானுக்கு பாஸ் இளைஞர் பிரிவும் உலாமாக்கள் மன்றமும் ஆதரவு தெரிவித்துள்ளன.