தேர்தலுக்குப் பின்னர் புரட்சி நிகழாதிருப்பதை உறுதி செய்யுமாறு பிஎஸ்சி-யிடம் கூறப்பட்டது

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் ஒருவர் தமது கட்சியிலிருந்து விலகினால் அந்த இடம் இயல்பாகவே காலியாகி விட்டதாக அறிவிக்கப்பட வேண்டும் என பினாங்கு கெரக்கான் பரிந்துரை செய்துள்ளது.

அவ்வாறு செய்வதின் மூலம் ஒர் அரசாங்கத்தை தெரிவு செய்யும் உரிமை வாக்காளரிடம் இருப்பது உறுதி செய்யப்படும் என அந்த கட்சியின் மாநில சட்ட, மனித உரிமைகள் பிரிவுத் தலைவர் பல்ஜித் சிங் கூறினார்.

அவர் இன்று புலாவ் பினாங்கில் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) நடத்திய விசாரணையில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டால் தேர்ந்தெடுக்கப்படும் அடுத்த பேராளரை நிர்ணயம் செய்வதற்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் எனப் பொருள்படும்.

அத்தகைய நடவடிக்கை தேர்தலுக்குப் பின்னர் அரசியல் நிலைத் தன்மையையும் உறுதி செய்யும் என அவர் கருதுகிறார்.

“கூட்டரசு அரசாங்க அல்லது மாநில அரசாங்க அதிகாரம் கைப்பற்றப்படாமல் இருப்பதும் அதனால் உறுதி செய்யப்படும்,” என பல்ஜித் கூறினார்,

பிஎஸ்சி இன்று இரண்டாவது நாளாக பினாங்கில் தனது விசாரணையை நடத்துக்கிறது. அதற்கு அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி தலைமை தாங்குகிறார்.

‘ஒரே மலேசியா, ஒரே பொதுத் தேர்தல்’

2009ம் ஆண்டு பேராக்கில் ஏற்பட்ட சூழ்நிலையை அது குறித்தது. அந்த நிலவரத்தில் மூன்று பேராளர்கள்-ஒருவர் பிகேஆர் கட்சியையும், ஒருவர் டிஏபி-யையும் சேர்ந்தவர்- தங்களது கட்சியிலிருந்து விலகியதால் அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்தது. இறுதியில் பாரிசான் நேசனல் பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

பல்ஜித்-துடன் மாநில கெரக்கான் உதவித் தலைவர் டாக்டர் லிம் பூன் ஹான், பிரச்சார, தகவல், தொடர்புப் பிரிவுத் தலைவர் டாக்டர் தோர் தியோங் கீ, சட்ட, மனித உரிமைகள் பிரிவின் பேராளரான ஒங் துன் ஹியாங் ஆகியோரும் விசாரணையில் கலந்து கொண்டனர்.

ஒங்கிலி தவிர பிஎஸ்சி-யின் மற்ற உறுப்பினர்களான நான்கு எம்பி-க்களும்- பி கமலநாதன் (உலு சிலாங்கூர்), முகமட் அஸ்மின் அலி (கோம்பாக்), லோ சியூ பூக் (ராசா) வீ சூ கியோங் (வாங்சா மாஜு)- ஆகியோரும் அந்த விசாரணையில் பங்கு கொண்டனர்.

தேர்தலுக்கான தேதியை நிர்ணயம் செய்வது உட்பட இதர நான்கு பரிந்துரைகளையும் பினாங்கு கெரக்கான் வழங்கியது. சபா, சரவாக் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் கூட்டரசு அரசாங்கத்துக்கும்  “ஒரே மலேசியா, ஒரே பொதுத் தேர்தல்’ நடைபெற வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

“அதனால் அரசியல் பொம்மலாட்டங்கள் குறையும். நாட்டை நிர்வாகம் செய்வதில் அரசாங்கம் முழுக் கவனம் செலுத்த முடியும். அதனால் உறுதியற்ற சூழ்நிலைகள் தவிர்க்கப்படலாம்,” என பல்ஜித் பிஎஸ்சி-யிடம் கூறினார்.

வாக்களிப்பின் போது அழியா மை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனையுடன் பல்ஜித், தேசியப் பதிவுத் துறையின் ஒத்துழைப்புடன் 21 வயதை அடைந்ததும் இயல்பான வாக்காளர் பதிவும், மரணமடைந்தவர்களுடைய பெயர்கள் இயல்பாகவே நீக்கப்படுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்தார்.

தில்லுமுல்லு வேலைகளை ஆய்வு செய்ய அரச விசாரணை ஆணையம் தேவை

தொகுதி எல்லைகள் நிர்ணயம் செய்யப்படுவதில் தில்லுமுல்லு நிகழ்வது மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்யுமாறு  சமூகப் போராளியான இங் எங் கியாட்  பிஎஸ்சி-யைக் கேட்டுக் கொண்டார்.

“வாக்கு எண்ணிக்கைக்கும் வெற்றி பெற்ற இடங்களுக்கும் இடையிலான வேறுபாடு ஆளும் கட்சி நீண்ட காலமாக நாடாளுமன்றத்தைத் தனது கட்டுக்குள் வைத்திருக்க வழி வகுத்து விட்டது என்பதைக் காட்டுவதற்கு மலேசிய வரலாற்றில் நிகழ்ந்துள்ள பல தேர்தல்களில் போதுமான புள்ளி விவரங்கள் காணப்படுகின்றன,” என தனிநபர் என்னும் முறையில் இங் தமது கருத்தைத் தெரிவித்தார்.

“முறையான விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்குக் காலம் கனிந்து விட்டது. மலேசிய ஜனநாயகத்தில் முன்னேற்றகரமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தனது போராட்டத்தில் குழு வெற்றி காண என் வாழ்த்துக்கள்,” என பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினரான சாவ் கோன் இயாவ் அலுவலகத்தில் வேலை செய்யும் இங் சொன்னார்.