இண்டர்லோக் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும்

கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலமாக சர்சைக்குள்ளாகியிருந்த இண்டர்லோக் பாடநூல் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் அந்த சர்ச்சைக்குள்ளான இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மஇகா தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று அவர் கூறினார்.

“பல்வேறு கூறுகளைக் கவனத்தில் எடுத்துகொண்டப் பின்னர் அம்முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவுக்கு இந்திய சமூகம் நன்றியுடையதாக இருக்கிறது”, என்றார் பழனிவேல்.

அந்த நாவலுக்கு எதிராக இந்திய சமூகம் கடுமையான கண்டனம் தெரிவித்து வந்துள்ளது. அது சமூகத்தை அவமதிக்கும் சொற்களைக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் அமைச்சரவையின் முடிவை உறுதிப்படுத்தினார்.

அப்துல்லா ஹுsசேன் (படத்தில் நடுவில் இருப்பவர்) எழுதிய இந்நூல் மீட்டுக்கொள்ளப்படுவதை அனைவரும் ஏற்றுக்கொண்டு இச்சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அடுத்த ஆண்டிலிருந்து இந்நாவலை பயன்படுத்துவதில்லை என்று கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள  உணர்ச்சிகளைத் தூண்டுவதாக கருதப்படும் சொற்கள் மீதான மனக்கசப்பு மேலும் வளராமல் அவரது அறிவிப்பு தடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று  அவர் கூறியதாக இன்று ஆயர் கெரோவில் கூறப்பட்டது.