சபா மாநில பிபிஎஸ் அரசாங்க அனுபவத்தைக் கருத்தில் கொண்டால் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் தேவலாயம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனை முழுக்க முழுக்க தற்செயலாக நிகழ்ந்த சம்பவமாகக் கருத முடியாது. இவ்வாறு சபா அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
“கிறிஸ்துவ மயப் பூச்சாண்டி” பழைய தந்திரம், அதற்கும் “இன்றைய சிலாங்கூருக்கும் பிபிஎஸ் கால கட்ட சபாவுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதை” காணலாம் என எஸ்ஏபிபி தலைவர் யோங் தெக் லீ கூறினார்.
1980ம் ஆண்டுகளில் யோங்கும் முன்னாள் பிகேஆர் உதவித் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கானும் ஆவி வாக்காளர்கள் எனக் கருதப்படும் 35,000 வாக்காளர்களை கண்டு பிடித்தனர். அத்துடன் பிபிஎஸ் மீது கிறிஸ்துவமயம் என்னும் பூச்சாண்டியும் காட்டப்பட்டது.
“முஸ்லிம்களை அம்னோ பக்கம் சாயச் செய்வதற்கு கிறிஸ்துவமயப் பூச்சாண்டி பயன்படுத்தப்பட்டது. அந்நியர்களைப் பயன்படுத்தும் ஆவி வாக்காளர்கள் மறைமுகமாக உபயோகப்படுத்தப்பட்டனர்”, என மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் முன்னாள் சபா முதலமைச்சருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.
1994ம் ஆண்டு பிபிஎஸ் அரசாங்கத்தில் ஒர் அங்கமாக இருந்த ஜெப்ரி, இப்போது சிலாங்கூரில் நடக்கும் சம்பவங்கள் அன்றைய சபாவில் நடந்தவற்றின் “அப்பட்டமான மறு ஓட்டம்” எனத் தெரிவித்தார்.
மதம் மாற்ற பிரச்னையில் நன்மையடையப் போவது யார்?
1980களில் மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தை நடத்திய ஜெப்ரியும் யோங்கும் வாக்காளர் பட்டியலில் அடையாளக் கார்டுகள் இரண்டு முறை, மூன்று முறை கூட இடம் பெற்றிருப்பதைக் கண்டு பிடித்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை இனவெறி என பிஎன் தரப்பு வாதிட்டது.
“அப்போதைய பெர்ஜெயா தலைவர் ஹாரிஸ் சாலேயுடன் இணைந்திருந்த அரசு சாரா இஸ்லாமிய அமைப்புக்கள் அதனை இன, சமயப் பிரச்னையாக்கி விட்டன. மலாய் முஸ்லிம் மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி நாங்கள் கவலைப்படுவதாக அவை கூறிக் கொண்டன”, என்றார் ஜெப்ரி.
ஆனால் அந்த பழைய தந்திரங்கள் இப்போது எடுபடாது என அந்த இரண்டு சபா தலைவர்களும் நம்புகின்றனர். ஏனெனில் வாக்காளர்கள் இப்போது தெளிவாகச் சிந்திக்கக் கூடிய தன்மையைப் பெற்றுள்ளனர். அந்தத் தந்திரங்கள் பயனளிக்கும் சாத்தியமில்லை. கிறிஸ்துவமயப் பூச்சாண்டி வெறும் “அரசியல் தந்திரம்” என்பதை அவர்கள் அறிவர்.
என்றாலும் ஷா அலாம் எம்பி சிறிதளவு கவலைப்படுகிறார். சிலாங்கூரில் நிரந்தரவாசிகள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விஷயத்தை பக்காத்தான் எழுப்பும் வேளையில் தேவாலயச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதனால் எதிர்த்தரப்பு, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து பாஸ் கட்சி மீது பிஎன் தொடுத்து வரும் தாக்குதல்கள், ‘அரசியல் ஆதாயத்தை’ தேடுவதற்காக அந்தச் சோதனை நடத்தப்பட்டதா என்னும் ஐயத்தை எழுப்பியுள்ளது எனசிலாங்கூர் பாஸ் துணை ஆணையருமான அவர் சொன்னார்.
“இஸ்லாமிய விவகாரங்களுக்கான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர், ஜயிஸ் இயக்குநர் ஆகியோருக்கு தெரியாமல் எப்படி அந்தச் சோதனை நிகழ முடியும்? (சம்பவம் நிகழ்ந்த பின்னரே அவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது) எனவே வெளியார் தலையீடு இருந்திருக்க வேண்டும்.”
பாஸ் கட்சி ஐக்கியமான நிலையை பராமரிக்க முடியுமா?
பிஎன் தொடுத்த தாக்குதல்கள், பாஸ் கட்சிக்கும் அதன் பக்காத்தான் தோழமைக் கட்சிகளுக்கு இடையில் மட்டுமின்றி அந்த இஸ்லாமியக் கட்சிக்குள்ளும் பிளவை ஏற்படுத்தி விட்டது.
ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தும் வரையில் கருத்துக் கூறுவதை பாஸ் தலைமைத்துவம் நிறுத்தி வைத்துள்ள போதிலும் தேவாலயச் சோதனையைத் தாம் ஆதரிப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் கூறியுள்ளார்.
“அந்த விஷயத்தைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாகக் காட்டிக் கொள்ள இளைஞர் பிரிவு விரும்புகிறது. ஆனால் கட்சி அந்த விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ள விரும்புகிறது.”
“கூட்டரசு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது போல முஸ்லிம்கள் மதம் மாற்றப்படுவதை நிராகரிப்பதே எங்கள் நிலை,” என காலித் சொன்னார். அவ்வாறு செய்வதாகக் கண்டு பிடிக்கப்படும் யாரும் சட்டத்துக்கு ஏற்ப தண்டிக்கப்பட வேண்டும்.”
என்றாலும் மதம் மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் காட்டப்பட வேண்டும்”, என்றார் அவர்.
பாஸ் கட்சி திறமையான நம்பிக்கை தரக் கூடிய ஐக்கிய நிலையை காட்டுவதைப் பொறுத்து ஜுலை 9 பேரணி காரணமாக வாக்காளர்களிடையே குறிப்பாக மலாய் வாக்காளர்களிடையே இழந்த செல்வாக்கை பிஎன் மீண்டும் பெற இயலுமா என்பது உறுதி செய்யப்படும் என அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறினார்.
“அந்த விஷயத்தில் பாஸ் பிளவுபட்டிருந்தால் பெர்சே2.0 பேரணிக்குப் பின்னர் கிடைத்த முன்னேற்றம் ஒரளவு சரிந்து விடும். ஆனால் கிளந்தானிலும் திரங்கானுவிலும் அது நிகழும் என நான் எதிர்பார்க்கவில்லை.”
“என்றாலும் கெடா உட்பட மேற்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள மலாய் வாக்காளர்கள், சமய விவகாரங்கள் என வரும் போது தாங்கள் முற்றுகைக்கு இலக்காகி இருக்கிறோம் என்னும் உணர்வை வெளிப்படுத்தியிருப்பதால் அங்கு ஒரளவு தாக்கம் இருக்கும்”, என வோங் சொன்னார்.