அமைச்சர்களின் ஊதியத்தைக் குறைப்பதால் பணவீக்கத்தை தீர்க்க முடியாது

அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த பணவீக்க எதிர்ப்பு குழு தலைவர் அன்னுாவர் மூசா, பணவீக்கத்தை குறைக்க இத்தகைய யுக்தி செயல்படும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த திட்டங்களை முன்வைத்தவர்களுக்கு, பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கு இதுபோன்ற தந்திரத்தை கையாண்ட நாட்டை அடையாளம் காணவேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.

“அமைச்சர்களின் ஊதியக் குறைப்பைக் கொண்டு பணவீக்கத்தைக் குறைக்க முடிந்த ஒரு நாட்டின் பெயரைக் குறிப்பிட முடியுமா? இரண்டாவதாக, ஒவ்வொரு அமைச்சரிடமிருந்தும் ரிங்கிட் 10,000 குறைத்து, அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையான  36 ஆல் பெருக்கினால், நீங்கள் எவ்வளவு பெற முடியும்? பணவீக்கம் தீர்க்கப்படும் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? பொருட்களின் விலை உயராதா? தயவு செய்து இதில் அரசியல் செய்யாதீர்கள் என்று செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அன்னுாவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, கோலாலம்பூரில் வணிக வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற பேரணியில் “டுருன் மலேசியா” எதிர்ப்புப் பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக அமைச்சர்கள் ஊதியக் குறைப்புக்களை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த மாதம், முன்னாள் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரபிதா அஜீஸ், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மக்களுடன் அனுதாபம் காட்ட அமைச்சர்களுக்கு 20% ஊதியத்தை குறைக்க பரிந்துரைத்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாக இத்தகைய ஊதிய குறைப்பு இருந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

-FMT