நான் வாழும் வரை போராடுவேன் – டாக்டர் மகாதீர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், 15வது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவு உறுதி என்றார்.

“நான் வாழும் வரை, நான் தொடர்ந்து போராடுவேன்” என்று அந்த பெஜுவாங் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று, 2018 இல் நடந்த 14வது பொதுத் தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பானுக்காக வெற்றி பெற்ற தனது லங்காவி தொகுதியை காக்கப் போவதாக மகாதீர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அரசியல் ஆய்வாளர் முஜிபு அப்த் முயிஸ், வருங்கால தேர்தல் வேட்பாளர்களுக்கான வயது வரம்பு 60 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் இடைத்தேர்தலை நடத்துவதைத் தவிர்க்க வேட்பாளர்கள் உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்று கூறினார்.

97 வயதான மகாதீர், நாட்டிற்கான மாற்றத்தை அடைய மற்றவர்கள் போராடும்போது தன்னால் சும்மா இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

“அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி  நாட்டின் வளங்களைத் திருடுபவர் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கு மற்றவர்கள் எதிராக போராட வேண்டும் என்று நான் விரும்பினால், நான் அவர்களுடன் சேர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

-FMT