முன்னாள் சபா பெர்சத்து வேட்பாளர் அக்டோபரில் GRS இல் பதிவு செய்ததை உறுதிப்படுத்தினார்

நவம்பர் 19 பொதுத் தேர்தலுக்கான ஒரு வேட்பாளர் தானும் மற்ற 11 வேட்பாளர்களும் அக்டோபரில் கபுங்கன் ராக்யாட் சபா (GRS) உறுப்பினர்களாகக் கையெழுத்திட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் பொருள் என்னவென்றால், நவம்பர் 19 தேர்தலுக்கு முன்பே, பெர்சத்துவில் அவர்களின் அங்கத்துவம் கட்சியின் அரசியலமைப்பின் பிரிவு 10.2.3 இன் கீழ் தானாகவே நிறுத்தப்பட்டது.

மலேசியாகினியிடம் பேசிய செம்போர்னாவின் GRS வேட்பாளர் நிக்சன் அப்துல் ஹபி, “பொதுத் தேர்தலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே” GRS உறுப்பினராகிவிட்டதாகக் கூறினார்.

GRS இல் சேருவதற்கான அவரது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான தேதி அவருக்குத் தெரியவில்லை

GRS ஆனது ஐந்து கட்சிகளின் கூட்டணியாகப் பகிரங்கமாக அறியப்பட்டாலும், அமைப்புகளின் பதிவுத் துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் பார்வையில், அது ஒரு சாதாரண அரசியல் கட்சி.

GRS முறைப்படி மார்ச் 11 அன்று பதிவு செய்யப்பட்டது. ஒரு கூட்டணியாக, GRS நவம்பர் 19 தேர்தலில் 12 வேட்பாளர்களை நிறுத்தியது அதில் ஆறு பேர் வெற்றி பெற்றனர்.

தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக, ஜிஆர்எஸ் ஆரம்பத்தில் முகைடின் யாசின் பிரதமராகப் பணியாற்றுவதாக உறுதியளித்தது, ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகு அன்வார் இப்ராஹிம் தலைமைப் பதவியைப் பெற்ற பின்னர் அவர்களின் ஆதரவு தளர்ந்தது.

டிசம்பர் 10 அன்று தான் 15 GRS சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு பெர்சத்து சபா எம்.பி.க்கள் அடங்கிய குழு, தாங்கள் பெர்சத்துவை விட்டு “வெளியேறுவதாக” பகிரங்கமாக அறிவித்தது.

இந்த நான்கு எம்.பி.க்களும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 49A பிரிவில் உள்ள கட்சித் தாவல் சட்டத்தை மீறுவதாகவும், தங்கள் இடங்களைக் காலி செய்ய வேண்டும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெர்சத்துவுக்குத் தெரிவிக்கத் தேவையில்லை’

கட்சியை விட்டு விலகுவதற்கான தனது முடிவைப் பெர்சாடுவிடம் தெரிவித்தீர்களா என்று கேட்டபோது, ​​நிக்சன் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார்.

“நான் பெர்சத்து தலைமையகத்திற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பவில்லை. நீங்கள் பெர்சத்து அரசியலமைப்பைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது அங்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது”.

“நாங்கள் GRS வேட்பாளராக (தேர்தலுக்கு முன்) முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.

பல கட்சி உறுப்பினர்கள்குறித்த மேற்கூறிய பிரிவைத் தவிர, பெர்சத்துவின் அரசியலமைப்பு பிரிவு 10.2.2 இன் கீழ் ஒரு நபர் கட்சியின் அனுமதியின்றி கட்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவோ அல்லது பொது பதவிக்கான தேர்தலில் பங்கேற்றதாகவோ “அறிவித்தால்” உறுப்பினராக இருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வரையறுக்கிறது.

நேற்று, பெர்சத்துவிலிருந்து வெளியேறிய நான்கு பேரில் ஒருவரான பாப்பர் நாடாளுமன்ற உறுப்பினர் அர்மிசான் முகமட் அலி தானும் GRS இன் உறுப்பினர் என்று கூறினார்.

ஜிஆர்எஸ் அரசியலமைப்பு, பெர்சத்து போலல்லாமல், உறுப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் சேர அனுமதிக்கிறது என்று ஆர்மிசான் கூறினார். ஜிஆர்எஸ் அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர் என்று அர்மிசான் கூறினார்.

மற்ற மூன்று எம்.பி.க்கள் கைருல் ஃபிர்தௌஸ் அக்பர் கான்(Khairul Firdaus Akbar Khan – Batu Sapi), ஜொனாதன் யாசின் (Jonathan Yasin – Ranau) மற்றும் மட்பாலி மூசா ((Matbali Musah – Sipitang) ஆகியோர் ஆவர்.

நிக்சன் மற்றும் ஆர்மிசானின் சமீபத்திய கருத்துக்கள் முன்னாள் சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபரின் கருத்துடன் ஒத்துப்போவதாகத் தெரிகிறது.