இருப்போர் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், சேவியர் ஜெயக்குமார்

“கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பே இருப்போர் இல்லாதவர்களுக்கு தந்து உதவுவது மட்டுமின்றி அன்பை அனைவரிடமும் பரிமாறிக் கொள்வதில்தான் உள்ளது”, என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் அவரது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தில் கூறுகிறார்.

மலேசிய மக்கள் அனைவருக்கும் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்ட சேவியர், அனைத்து கிறிஸ்துவ குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினமாக இன்றும் இனி என்றும் அமைய இறைவனை பிராத்திக்கிறோம் என்றார் சேவியர்.

“இந்த இனிய வேளையில் நமக்கு கிடைக்கும் அனைத்து இன்பங்களும் உலகெங்கும் வாழும் மக்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டும். அவ்வாறே, நமது நாட்டின் வளமும் செழிப்பும் அனைத்து மக்களிடமும் சென்றடைவதை உறுதி செய்ய எல்லா சமயத்தினரும் ஒன்றுபட்டு பாடுபடுவதை நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

“இயேசு நாதர் முதல் அனைத்து சமயப் பெரியோர்களும் மக்களின் நல்வாழ்வுக்காகவே அர்பணிப்பும் தியாகமும் செய்துள்ளனர். அவ்வாறே, நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்நாட்டில் சிறப்பாக வாழ நம் மக்கள் அனைவருக்கும் இடமுண்டு; நாட்டில் வளமுண்டு; செழிப்பு உண்டு; மார்க்கம் உண்டு என்பதை நாம் அறிந்திருந்தும் சிறு அர்பணிப்பு செய்யத் தயங்கியதால், தவறியதால், இதுவரை நாம் இழந்துள்ளது எண்ணிலடங்கா கோடியாகும்.

“இது கடந்த கால நிகழ்வாக இருக்க வேண்டும். சமத்துவமான நாட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் அனைத்து வாய்ப்புகளும், வசதிகளும் நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறையினர்களும் அடைய நாம் சரியான அடித்தளமிட இப்போதுள்ள வாய்ப்பினை தவறவிட்டால், எதிர்காலச் சந்ததியினர் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை மனதிலிறுத்தி நாம் செயல்பட வேண்டும்.

“நாட்டு மக்களிடையே ஒற்றுமையும், புரிந்துணர்வும் வளர அனைத்து வழிகளிலும் உழைத்து வருகிறோம். எல்லாப் பண்டிகைகளின் போதும் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தி வருகிறோம். அதனைத் தொடர்ந்து நடத்தி நாட்டின் மேம்பாட்டுக்கு உழைப்போம், உயர்வடைவோம்”, என்று சேவியர் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறுகிறார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது சார்பிலும், சிலாங்கூர் மாநில அரசின் சார்பிலும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை சேவியர் தெரிவித்தார்.