சுயதேவைக்கு அதிகமாக கோருகின்ற உலகம் இது, காலிட் இப்ராகிம்

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் கிறிஸ்துவ சமயத்தினருக்கும் இன்னும் சில தினங்களில் புத்தாண்டைக் கொண்டாடவிருக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராஹிம்  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.          

“பல்லின மக்களைக் கொண்ட நாட்டில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை ஒவ்வோராண்டும் உணர்த்தும் விழாவாக கிறிஸ்துஸ் பண்டிகை விளங்குகின்றது. நம்மிடையே காணப்படும் வேற்றுமைகள் நமக்குள் ஒற்றுமையை வளர்க்கின்றன என்ற உண்மையை நாம் அனைவரும்  உணர்ந்து கொள்ளவும் ஒப்புக் கொள்ளவும் வேண்டும்.

“புதிய ஆண்டு பிறக்கின்ற ஒவ்வொரு முறையும் புத்தாண்டு லட்சியத்தை மனதில் விதைக்கின்ற அதேவேளையில்,  முடிந்த வருடத்தின் நிகழ்வுகளை அசைபோடுவது  நமது வழக்கம். கடந்த ஆண்டை விட புதிய ஆண்டில் நமது வாழ்க்கை சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்பு.          

“நாட்டுடைமை மற்றும் சமூகவியல் சார்ந்த மேன்மை நிலை நமது வாழ்வில் என்றும் நிலைத்திருப்பதை இந்த புதிய ஆண்டிற்கான இலட்சியமாக நாம் அனைவரும கொள்வோம். இந்த லட்சியத்தை அடைவது அவ்வளவு எளிதான காரியமாக அல்ல. அதற்கு வலுவான மனவுறுதி தேவை. மேலும்  மனித உரிமை, நீதி, சுதந்திரம் ஆகிய அடிப்படை கோட்பாடுகள் சிக்கல் நிறைந்த நமது வாழ்வில் எவ்வாறு முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை புதிய கோணத்தில்ஆராய்ந்து பார்ப்பதற்குரிய தகுதிக்குரியவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வது அவசியமாகும்.          

“ஓர் அரசு நிர்வாகத்திற்கு  நீதிக் கோட்பாடு, பொறுப்புணர்வு மற்றும் சிறப்பான நிர்வாக முறை ஆகியவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் பிரச்னைகளுக்கு வித்திடாது என்று கூறவும் முடியாது. அப்பிரச்னைகளைக் களைய வெளிப்படையான கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமே தவிர யாருக்கும் தெரியாமல் பிரச்னைகளை மூடி மறைக்கக்கூடாது.          

“2011 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலம் முதலீடுகளையும் வருமானத்தையும் அதிகரித்து அதன் மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரின் நலனைக் காக்க பல்வேறு திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்களை விரைந்து அமல் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு உள்ளது.          

“சிறப்பான வாழ்க்கைக்காக நாம் அனைவரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளையில் சுயதேவைக்கு அதிகமாக கோருகின்ற பல்வகை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”, என்பதை மறந்து விடக் கூடாது என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.