பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இளைஞர்களை நெருங்கிச் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக 70 விழுக்காட்டு இளைஞர்கள் அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருப்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2010-இலிருந்து மேற்கொள்ளப்பட்ட அவ்வாய்வில் கலந்துகொண்ட இளைஞர்கள், சமூகக் கட்டமைப்பு ஊடகத்தைப் பயன்படுத்தித் தங்கள் கருத்துக்களை நேரடியாக அறியும் நஜிப்பின் அணுகுமுறை தங்களுக்குப் பிடித்திருப்பதாக தெரிவித்தனர்.
“என் ஆய்வில் 70 விழுக்காட்டு இளைஞர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பது தெரிய வருகிறது”, என்று கூறிய யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா(யுஐடிஎம்) அரசியல் கல்வி விரிவுரையாளர் சே ஹம்டான் முகம்மட் ரசாலி அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படுவது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்றார்.
அந்த ஆய்வு 18-க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள், நிபுணர்கள், மீனவர்கள், விவசாயிகள் முதலானோரிடம் மேற்கொள்ளப்பட்டது.சமூக ஊடகத்தின்வழி தொடர்பு வைத்துக்கொள்வதுடன் நஜிப் அரசாங்கம் வெளிப்படையான முறையில் செயல்படுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்.
பாரிசான் நேசனல் அரசு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞர்களுக்கு அடக்கவிலையில் வீடுகள் கட்டித் தருதல், இளம் தொழில் முனைவர்களுக்கு உதவியளித்தல், உயர்கல்விக்கு உதவுதல் என இளைஞர்களுக்குப் பல வழிகளிலும் உதவி வருவதை அவர்கள் பாராட்டுகிறார்கள் என்றாரவர்.
மாற்றரசுக் கட்சியினர் இளைஞர்களை அரசாங்க-எதிர்ப்பாளர்கள்’போல் சித்திரித்துக் காட்ட முயல்கிறார்கள் என்றும் அதில் உண்மை இல்லை என்றும் சே ஹம்டான் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
“சில இளைஞர்கள் எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் இயல்பு உள்ளவர்கள்தான். ஆனால், பலரும் கூறுவதுபோல் இளைஞர்கள் பொதுவில் ‘அரசு-எதிர்ப்பாளர்கள்’ அல்லர் என்பதைத்தான் என் ஆய்வின் தொடக்கநிலை முடிவுகள் காண்பிக்கின்றன. அவர்களை ஒதுக்கிவைக்க முற்படும்போதுதான் ஆத்திரம் அடைகிறார்கள். அரசு அவர்களின் நலனில் அக்கறை காண்பித்தால் அவர்களும் ஆதரவு கொடுப்பார்கள்”, என்றவர் விளக்கினார்.
ஆனால், சே ஹம்டான் ஆய்வில் தெரியவரும் மற்ற விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்தார். ஆய்வு இன்னும் முடியவில்லை என்றும் அது இறுதிசெய்யப்பட்ட பின்னரே அவை அறிவிக்கப்படும் என்றார்.
–பெர்னாமா