நான்கு மாநிலங்களில் வெள்ளம்: 3,000 பேர் வெளியேற்றம்

ஜோகூர், பகாங், சாபா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தின் காரணமாக பலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தனர். இன்னொரு மாநிலமான சரவாக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 2,734 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஜோகூரில் 1,437 பேர், பகாங்கில் 946 பேர், சாபாவில் 351 பேர். சரவாக்கில் ஏழு குடும்பங்கள் அவர்களின் குடியிருப்புகளிலிருந்து அப்புறப்பட்டனர்.

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 25 துயர்துடைப்பு மையங்களில் வைக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு மன்றம் கூறிற்று. அம்மையங்களில் 12 செகாமாட்டிலும் ஏழு மெர்சிங்கிலும் ஆறு பத்து பாகாட்டிலும் உள்ளன.

எண்டாவ்-ரொம்பின் தேசிய பூங்காவில், பெடாவில் உள்ள ஓராங் அஸ்லி கிராமத்துக்குச் செல்லும் மண்சாலை நீரில் மூழ்கியுள்ளது. படகின்வழி அல்லது ஆகாய வழியாகத்தான் அக்குடியிருப்பை அடைய முடியும்.

இரண்டு ஆறுகளில் நீர்மட்டம் இன்னமும் அபாய எல்லையையும் தாண்டி உயர்வாகவே உள்ளது என்று வடிகால், நீர்பாசனத் துறை இணையத்தளம் அறிவித்துள்ளது.சுங்கை மூவார் நீர் மட்டம், புக்கிட் கெப்போங்கில் 3.34 மீட்டராகவும் செகாமாட்டில் பூலோ கசாப் நீர் மட்டம் 9.47 மீட்டராகவும் உள்ளது.

பகாங், ரொம்பின் மாவட்டத்தில் நேற்றிரவு 618 ஆக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை 946 ஆக உயர்ந்திருப்பதாக பகாங் போலீஸ் வெள்ள நடவடிக்கை அறைப் பேச்சாளர் கூறினார்.

சாரா தியோங்கில், மேலும் ஒரு துயர்துடைப்பு மையம் நேற்றிரவு திறக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 422 பேர் எஸ்கே பியாங்குவிலும், 2,47 பேர் தெலுக் காடிங் மண்டபத்திலும்,119 பேர் புக்கிட் செரோக் மையத்திலும், 21 பேர் கம்போங் ரெகோ சமூக மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.

சாபாவில்,  சண்டாகான் கும்கும் கம்பத்திலிலிருந்து வெளியேற்றப்பட்டவர் எண்ணிக்கை நேற்றிரவு 341 ஆக இருந்து இன்றுகாலை 351 ஆக உயர்ந்தது. சண்டகான் முனிசிபல் மன்ற வெள்ளநடவடிக்கை மையப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

சண்டாகான் மாவட்டத்தில் கடுமையான மழை விட்டுவிட்டுப் பெய்வதாகவும் அவர் சொன்னார்.