MACC 10 பேரைக் கைது செய்து, முதலீட்டு மோசடி கும்பலை முறியடித்தது

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 200 மில்லியன் ரிங்கிட்) மோசடி செய்த முதலீட்டு மோசடி சிண்டிகேட் தொடர்பாக ஐந்து பிரிட்டிஷ் மற்றும் இரண்டு பிலிப்பைன்ஸ் பிரஜைகள் உட்பட பத்து பேரை எம்ஏசிசி கைது செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் 24 இடங்களில் எம்ஏசிசியின் பணமோசடி தடுப்புப் பிரிவுச் சோதனை நடத்தியபோது அவர்கள் ‘Op Tropicana’ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் பிரிட்டிஷ் சூத்திரதாரிகளால் வழிநடத்தப்பட்ட இந்தச் சிண்டிகேட் 2019 முதல் செயல்பட்டு வருவதாகவும், பணமோசடி நடவடிக்கைகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

சோதனை செய்யப்பட்ட வளாகத்தில் கோலாலம்பூரில் இரண்டு மற்றும் பினாங்கில் உள்ள மூன்று பாய்லர் அறைகள் அடங்கும்.

39 முதல் 59 வயதுடைய சந்தேகநபர்கள் இன்று புத்ராஜெயாவில் மாஜிஸ்திரேட் முகமட் டினி ஷாஸ்வான் அப் ஷுகோர் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்.ஏ.சி.சி.யின் ஆரஞ்சு லாக்-அப் உடையில் கைவிலங்கிடப்பட்ட சந்தேக நபர்கள், குடிவரவுத் துறையின் சிறப்பு தந்திரோபாயக் குழுவின் பாதுகாப்புடன் பிற்பகல் 2.23 மணிக்குப் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மோசடி செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்திரேலியர்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் என்று கூறப்பட்டது, அவர்கள் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்வதில் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

“சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள்மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதே சிண்டிகேட்டின் செயல்பாடாக இருந்தது,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

சிண்டிகேட் தனது உறுப்பினர்களைப் பாதுகாக்கவும், நாட்டில் அதன் பாய்லர் அறைகளை இயக்கவும் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.