வரி அதிகரிப்பு: வருடத்திற்கு ரிம. 230,000 மற்றும் அதற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு மட்டும்

உயர்த்தப்பட்ட வருமான வரி விகிதம் ஆண்டுக்கு ரிம230,000 க்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானம் ஈட்டுபவர்களை மட்டுமே பாதிக்கிறது என்று துணை நிதி அமைச்சர் II ஸ்டீவன் சிம்(Steven Sim) இன்று தெளிவுபடுத்தினார்.

இது தோராயமாக மாதத்திற்கு 19,166.67 ரிங்கிட் வரி விதிக்கத் தக்க வருமானமாகும்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெள்ளியன்று தனது 2023 வரவுசெலவுத் திட்ட உரையில் ரிம100,001 முதல் ரிம250,000 வருமான வரி அடைப்பு மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் 0.5% முதல் 2% வரை உயர்த்தப்பட்ட விகிதங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறியதைத் தொடர்ந்து இது வந்தது.

வரிவிதிக்கத் தக்க வருமானத்தில் ரிம8,000 க்கு மேல் சம்பாதிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆரம்பத்தில் சிலரால் புரிந்து கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், வருமான வரி எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதன் காரணமாக, ரிம230,000 க்கு மேல் சம்பாதிப்பவர்கள் மட்டுமே உயர்த்தப்பட்ட விகிதங்களுக்கு உட்பட்டிருப்பார்கள் என்று சிம் (மேலே) விளக்கினார்.

ரிம230,000-க்கும் குறைவான வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோர், M40 குழுமத்திற்கான வருமான வரியில் 2% குறைக்கப்பட்டதால் ரிம1,000 வரை கூடச் சேமிக்க முடியும் என்று சிம் கூறினார்.

வரவுசெலவுத் திட்ட உரைக்குப் பிறகு வெளியிடப்பட்ட நிதியமைச்சகத்தின் ஒரு அட்டவணை, வருமான வரியில் 0.5 சதவிகிதம் கூடுதலாகச் செலுத்த வேண்டியவர்களுக்கு, அது அதிகபட்சம் ரிம200 வரை வரும் என்பதைக் காட்டியது.

இதற்கிடையில், ரிம1-2 மில்லியன் வரி வரம்பில் உள்ள வரி செலுத்துவோர், ரிம10,950 வரை கூடுதல் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.

செல்வந்தர்கள் மீதான அதிகரித்த வருமான வரி அரசாங்கத்தின் முற்போக்கான வரிவிதிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

“எங்கள் வரி விகிதத்தில் கடைசியாக ஒரு தசாப்தத்திற்கு முன்பு 2015 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது,” என்று சிம் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

“மக்களுக்குச் சுமை கொடுக்காத, அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் மிகவும் சமமான வரிவிதிப்பை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் பாரு மற்றும் பினாங்கில் உள்ள நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு – அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் நிதிக் கடமைகள் காரணமாகச் சுமார் 10,000 ரிங்கிட் சம்பளம் கூடப் போதுமானதாக இருக்காது என்பதை தாம் புரிந்துகொண்டதாகச் சிம் நேற்று ஒரு தொடர்புடைய முகநூல் பதிவில் கூறினார்.