கடல்பெருக்கால் திரெங்கானு கடற்கரை பாழானது

திரெங்கானுவில், கடல்பெருக்கும் ராட்சத அலைகளும்  பல கடற்கரைகளை அரித்துப் பாழாக்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு மோசமான கடல் சீற்றம் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்த மாதம்வரை நீடிக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ள கடலின் சீற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்று டுங்குன்.டுங்குனில் தெலுக் லிபாட் கடற்கரையைப் பேரலைகள் அரித்து அழித்துவிட்டன.

பெர்னாமா அங்கு சென்று  பார்த்ததில், கடற்கரையில் இருந்த பல சவுக்கு மரங்கள் விழுந்து கிடந்ததுடன் அருகில் உள்ள ஒரு கல்விமையத்துக்குச் செல்லும் முக்கிய சாலையொன்றும் அலைகளால் சேதமடைந்திருந்தது.

ஐந்து மீட்டர் உயர அலைகளால் தாக்கப்பட்ட அச்சாலை, விபத்துகளைத் தவிர்க்க, இப்போது மூடப்பட்டுள்ளது.

அங்கு ஸ்டால்கடை வைத்து உணவு விற்பனை செய்துவரும் ஒரு வியாபாரியான அஹ்மட் பவுசி இஸ்மாயில், 50, கடந்த நான்கு நாள்களில் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக சாலையில் ஒரு பகுதி இடிந்து விட்டதாகக் கூறினார்.

26 ஆண்டுகளாக அங்கு வியாபாரம் செய்து வருவதாகக் கூறிய அவர், இவ்வளவு பெரிய அலைகளை இதுவரை கண்டதில்லை என்றும் அதனால் அங்குள்ளவர்கள் கவலை அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“இப்பகுதி ஒவ்வோராண்டும் பெரிய அலைகளால் தாக்கப்படுவதுண்டு. ஆனால், மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கோ சாலைகளைச் சேதப்படுத்தும் அளவுக்கோ அவை மோசமாக இருந்ததில்லை.

“இந்நிலை பல நாள்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதுதான் கலக்கத்தைத் தருகிறது. கடல்நீர் சாலை மட்டத்துக்கு உயர்ந்து விட்டது. இன்னும் சில மீட்டர் வந்தால் கடைகளைத் தொட்டுவிடும்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடற்கரைகளைப் பேரலைகள் பாழ்படுத்தி வந்தாலும், கடந்த சில நாள்களில் கடற்கரைகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. கடலின் சீற்றத்தை வேடிக்கை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் கடற்கரைகளில் கூடி விடுகிறது.

-பெர்னாமா