சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவி விலகுவதாகக் கடிதம் கொடுக்கவில்லை என்று முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்னர் கூறியதையே துணைப் பிரதமர் முகைதின் யாசினும் இன்று எடுத்தொலித்தார்.
யுஐடிஎம் பூஞ்சாக் ஆலமில் செய்தியாளர்கள் வினவியதற்கு, “தா’ அடா (அப்படி ஒன்றும் இல்லை)”, என்று மட்டுமே முகைதின் சொன்னார்.
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் கொடுத்த பதவி விலகல் கடிதத்தை அமைச்சரவை கடந்த வாரமே ஏற்றுக்கொண்டுவிட்டதாக பலத்த வதந்தி உலவுவதை அடுத்து அவரிடம் அது குறித்து வினவப்பட்டது.
வெள்ளிக்கிழமை, சோலாரிஸ் மொண்ட் கியாராவில் உள்ள நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசனில்(என்எப்சி) மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) மேற்கொண்ட அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து அவ்வதந்தி மேலும் வலுவடைந்தது.
கடந்த வாரம் நஜிப்பிடம் அது பற்றி வினவியபோது, ஷாரிசாடிடமிருந்து பதவி விலகல் கடிதம் எதையும் பெறவில்லை என்றார். ஷாரிசாட்டின் குடும்பத்தார்தான் என்எப்சி-யை நடத்தி வருகிறார்கள்.
அக்டோபரில் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வெளியானதிலிருந்து இச்சர்ச்சை தொடர்கிறது.
மலேசியாவின் மாட்டிறைச்சி தேவையை ஈடுசெய்வதற்காக உருவான என்எப்சி திட்டத்தின் கணக்குகளில் குளறுபடி நிலவுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
பிகேஆர் மேலும் புலன் விசாரணை நடத்தி, அரசாங்கம் எளிய நிபந்தனைகளில் வழங்கிய ரிம250மில்லியன் கடனைக் கொண்டு அந்நிறுவனம் ஆடம்பர கொண்டோமினியம்கள், புத்ரா ஜெயாவில் நிலம், ஆடம்பரக் கார் முதலியவற்றை வாங்கியிருப்பதை அம்பலப்படுத்தியது.
ஷாரிசாட், தாம் என்எப்சி உரிமையாளரின் மனைவி என்பதைத் தவிர அந்நிறுவனத்துக்கும் தமக்கும் வேறு எந்தத் தொடர்புமில்லை என்றார்.
இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் இதுவரை 20-க்கு மேற்பட்டோரை விசாரித்திருப்பதுடன் 45-வயது வணிகர் ஒருவரையும் தடுத்து வைத்துள்ளானர்.