ரசாலியின் அமானாவுக்கு பினாங்கு அம்னோவில் வரவேற்பில்லை

பினாங்கு அம்னோ, அண்மையில் தெங்கு ரசாலி தலைமையில் அமைக்கப்பட்ட அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) அங்காத்தான் அமானா மெர்டேகா(அமானா)-வை வரவேற்கவில்லை.

அமானாவில் பெரும்பாலும் பாரிசான் நேசனல் உறுப்புக்கட்சிகளைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக இருப்பதால் அது பயனான அமைப்பாக செயல்பட இயலாது என்று நினைக்கிறார் புக்கிட் மெர்டாஜாம் அம்னோ தலைவர் செனட்டர் மூசா ஷேக் பாட்சிர்.

இவர்களுக்குக் குறைகள் இருந்தால் அவற்றை ஏன் கட்சிவழியே முறைப்படி எழுப்பலாம் அல்லது கவனப்படுத்தலாம், அதை ஏன் செய்யவில்லை என்றவர் வினவினார்.

“அதற்காக ஏன் ஒரு என்ஜிஓ-வை அமைக்க வேண்டும். அதனால் குழப்பம்தானே ஏற்படும். ‘என்ன செய்கிறார்கள் இந்த பிஎன் தலைவர்கள்’ என்று மக்கள் கேட்க மாட்டார்களா?”

இந்தத் தலைவர்கள் தத்தம் கட்சிவழியேதான் தங்கள் குறைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று மூசா வலியுறுத்தினார்.

“சொந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியாத இவர்களா மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப் போகிறார்கள்?”, என்று குபாங் செமாங்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது மூசா கேள்வி எழுப்பினார்.

அவர், கடந்த மாதம், துங்கு அப்துல் ரஹ்மான் நினைவுப் பூங்காவில் தொடக்கி வைக்கப்பட்ட அமானா அமைப்புப் பற்றிக் கருத்துரைத்தார். 

அத்தொடக்கவிழாவில், அமானா தலைவர் ரசாலி, தம் குழுவினரை அறிமுகப்படுத்தினார். மசீச முன்னாள் தலைவர் ஒங் தி கியாட், மஇகா முன்னாள் துணைத் தலைவர் சி.சுப்ரமணியம், முன்னாள் கலை, கலாச்சார, சுற்றுலா அமைச்சர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் ஆகியோரை அமைப்பின் துணைத் தலைவர்கள் என்றவர் குறிப்பிட்டார்.

சாபா, சரவாக்கின் முன்னாள் தலைவர்களான துவாரான் எம்பி ஃபில்பிரட் பும்புரிங், பார்டி பிசாகா பூமிபுத்ரா முன்னாள் தலைவர் பூஜாங் யூலிஸ், சரவாக் முன்னாள் துணை முதல்வர் டேனியல் தாஜெம் ஆகியோர் அதன் இதர துணைத் தலைவர்கள் ஆவர்.

அரசியல் கட்சிகள் பதிவுசெய்த வாக்காளர் எண்ணிக்கையை இசி வெளியிட வேண்டும்

இதனிடையே, பினாங்கு பிஎன் தகவல் பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.லோகனாதன், வாக்காளர் பதிவு இயக்கத்தின்போது அரசியல்கட்சிகள் பதிவுசெய்த வாக்காளர்களின் எண்ணிக்கையைத் தேர்தல் ஆணையம் (இசி) வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்,  வாக்காளர் பட்டியலில் மூன்றே மாதங்களில் திடீரென்று 32,000 வாக்காளர்கள் கூடியிருப்பதாக கடந்த வாரம் கூறியிருந்தார்.(அதில் முகவரி மாற்றம், இறப்பு முதலிய காரணங்களினால் 6,000 பேரின் பெயர்கள் பின்னர் நீக்கப்பட்டன).

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும் பத்து மாவுங் சட்ட மன்ற உறுப்பினருமான அப்துல் மாலிக் அப்துல் காசிம், தம் தொகுதியில் 1,400 அஞ்சல்வழி வாக்காளர்கள் திடீரென்று முளைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இசி, புதிய வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்டால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைப் பொதுமக்களே தெரிந்துகொள்வார்கள் என்று லோகநாதன் கூறினார்.

“தேர்தல் ஆணையத்திடம் அதை,இதை விசாரணை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வதைவிட பினாங்கில் புதிய வாக்காளர்களின் பட்டியலை வெளியிடச் சொல்வது மேல்”, என்று குபாங் செமாங்கில் உலா வந்தபோது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.