நட்மாவிடம் மேக விதைப்பு உதவியை நாடுகிறது பினாங்கு

மாநிலத்தில் உள்ள அணை நீர் பிடிப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேக விதைப்பு நடவடிக்கைகளுக்கு உடனடி உதவியைக் கோருமாறு பினாங்கு அரசாங்கம் தேசிய பேரிடர் மேலாண்மை முகமைக்கு (Nadma) கடிதம் எழுதியுள்ளது.

ஏர் இடாம் அணை(Air Itam Dam) மற்றும் தெலுக் பஹாங் அணையின்(Teluk Bahang Dam) நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேக விதைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த 400,000 ரிங்கிட் ஒதுக்கவும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகப் பினாங்கு நீர் வழங்கல் கழகத்தின் (Penang Water Supply Corporation) தலைமை நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் தெரிவித்தார்.

“மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலிலும், மார்ச் 30 தேதியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்திலும், காலநிலை மாற்றம் காரணமாக, ஏர் இட்டாம் மற்றும் தெலுக் பஹாங் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக மாநில செயலாளர் அலுவலகம் நத்மாவின் செயல்பாட்டு அமலாக்கப் பிரிவுக்குத் தெரிவித்திருந்தது.

இதனால் அணைகளின் கொள்ளளவு இன்று வரை கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு 82.5% இருந்த ஏர் இட்டம் அணை 49.5%, தெலுக் பஹாங் அணையின் கொள்ளளவு 64 சதவீதத்திலிருந்து 50.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது,” என்று பத்மநாதன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம்வரை வறட்சி நீடித்தால் இரு அணைகளின் கொள்ளளவு மேலும் ஆபத்தான நிலைக்குக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய தகுதிவாய்ந்த நிறுவனங்களின் சமீபத்திய நிலைகுறித்து மாநில செயலாளர் அலுவலகம் வானிலை ஆய்வுத் துறைக்குப் பரிந்துரைத்துள்ளதாகப் பத்மநாதன் கூறினார்.

இருப்பினும், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) நிர்ணயித்த அளவுகோல்களையும் நிபந்தனைகளையும் எந்த நிறுவனமும் பூர்த்தி செய்ய முடியவில்லை.

மேக விதைப்பை விரைவில் செயல்படுத்துவதற்கு வசதியாக நட்மாவின் உதவியை நாடுவதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறினார்.

“ஏர் இட்டம் அணை மற்றும் தெலுக் பஹாங் அணையை நிரப்பும் மழையை உற்பத்தி செய்ய மேக விதைப்பு நடவடிக்கைகள் விரைவில் தேவைப்படுவதால் நட்மா இதற்கு முன்னுரிமை அளித்துப் பினாங்கின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

1.74 மில்லியன் மக்களுக்குத் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் மற்றும் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product) ரிம99 பில்லியனுக்கு பங்களித்த சமூக பொருளாதார நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் சாத்தியமான நீர் வழங்கல் நெருக்கடியைப் பினாங்கு தவிர்க்க வேண்டும் என்று பத்மநாதன் மேலும் கூறினார்.