பெண் ஓட்டுநரைத் தாக்கியவர் கைது

பாலிக் புலாவில் உள்ள ஜாலான் பெர்மாத்தாங் டமார் லாட்டில் வியாழக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் பெண் ஓட்டுநரைத் தாக்கிய நபரைப் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க உதவுவதற்காக 32 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டதாகப் பாரத் தயா மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்த் கமருல் ரிசால் ஜெனால் தெரிவித்தார்.

முதல்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய பெண் ஓட்டுநர்மீது அந்த நபர் அதிருப்தியில் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்தப் பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.

குறித்த நபர் இன்று விளக்கமறியலில் வைக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், தண்டனைச் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 04-866 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பெண் ஓட்டுநரைத் தலைக்கவசத்தால் தாக்குவதற்கு முன்பு வன்முறையாக நடந்து கொள்ளும் 14 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப் வைரலானது.

இதற்கிடையில், மற்றொரு சம்பவத்தில் , இன்று அதிகாலை இங்குள்ள பயான் லெபாஸில் போலிஸ் நடத்திய சாலை தடுப்பு சோதனையில்  ஆறு மோட்டார் சைக்கிள்களைப் போலீசார் பறிமுதல் செய்ததாகக் கமருல் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 64 (1) இன் படி ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அதிகாலை 1 மணிக்குத் தொடங்கிய நடவடிக்கையில், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காகப் போலீசார் 133 சம்மன்களை வழங்கியுள்ளனர்.