நாளை முதல் செப்டம்பர் 30 வரை EKVE-யில் கட்டணமில்லா பயணம்

கிழக்கு கிளாங் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (EKVE) நாளைக் காலை 6 மணி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 11.59 மணிவரை கட்டணமின்றி (டோல்-இல்லாமல்) இருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“மெர்டேக்காவைப் போற்றும் விதமாக, நாளைக் காலை 6 மணி முதல் EKVE-யில் 30 நாட்கள் கட்டணமில்லா பயணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று இன்று கோலாலம்பூரில் உள்ள அம்பாங் டோல் பிளாசாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியைத் திறந்து வைத்தபோது அவர் கூறினார்.

24 கிமீ பிரிவு ஒன்று சுங்கை லாங், பண்டார் மஹ்கோட்டா சேராஸ், ஹுலு லங்கட் மற்றும் அம்பாங் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு இடமாற்றங்களைக் கொண்டுள்ளது.

பிரதமர் தனது உரையில், இரண்டாம் பிரிவின் கட்டுமானப் பணிகளைத் தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நெரிசல் ஏற்கனவே உச்சத்தை எட்டியுள்ளது. கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில், போக்குவரத்து நெரிசல்கள் கடுமையாக உள்ளன, எனவே இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் அதிக செலவுகள் இருந்தபோதிலும் துரிதப்படுத்தப்பட்டு திட்டமிடப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.”

“கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு மேலதிகமாக, பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளும் அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெறுகின்றன, ஏனெனில் மலேசியா ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த வசதிகள் இப்போது உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமல்ல, வருகையாளர்களுக்கும் அவசியமானவை,” என்று அவர் கூறினார்.

மேலும், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி, பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி, அரசின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.