நாட்டில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உணவு முறைகள் மற்றும் உணவுத் தரம் முக்கிய காரணிகளாக உள்ளன என்று சுகாதார அமைச்சர் சுல்கேப்லி அகமது தெரிவித்தார்.
எனவே, சுகாதார அமைச்சகம் அதன் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் திட்டத்தை நீண்டகால தடுப்பு நடவடிக்கையாகத் தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது.
தற்போது ஒவ்வொரு ஆண்டும் 40,000-க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்படுகின்ற நிலையில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில், பண்ணை முதல் உணவுப் பட்டறைவரை முழு உணவுத் தளவமைப்பையும் கண்காணிப்பது அவசியம் என சுல்கேஃப்லி தெரிவித்தார்.
“புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று உணவுமுறை. அதனால்தான் சுகாதார அமைச்சகம் ஒரு விரிவான உணவு பாதுகாப்பு மற்றும் தரத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இது ஒரு ஆரம்ப கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும்”.
“பரந்த சுகாதார கட்டமைப்பிற்குள் மற்றும் பொது சுகாதாரத்தின் முக்கிய பராமரிப்பாளர்களாக, அமைச்சகம் பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் உணவுத் திட்டங்களை நடத்துகிறது, அதே நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் திட்டம் உட்கொள்ளும் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது”.
“பண்ணை முதல் உணவுப் ப்ட்டரை வரை இந்த அணுகுமுறை விரிவானது. முழு உணவு விநியோகச் சங்கிலியும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும், குறிப்பாக இன்றைய உலகளாவிய உணவு வர்த்தக சூழலில்,” என்று அவர் இன்று வாய்மொழி கேள்வி அமர்வின்போது மக்களவையில் கூறினார்.
அமைச்சர் வலியுறுத்தியதாவது, மக்கள் சுகாதாரத்திற்கான “காவலர்” என இந்தத் திட்டம் செயல்படுகிறது, ஏனெனில் பல நோய்கள் மக்கள் உண்ணும் உணவின் வகையிலிருந்தே உருவாகின்றன.
“உணவு சாப்பிடத் தயாராக இருந்தாலும் சரி, உள்ளூரில் பதப்படுத்தப்பட்டாலும் சரி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் சரி, இறக்குமதி செய்யப்பட்டாலும் சரி, அது பாதுகாப்பாகவும் உயர் தரத்துடனும் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, இஸ்மாயில் அப்துல் முத்தலிப் (PN–Maran), நவீன உணவுப் பழக்கவழக்கங்கள் புற்றுநோய்க்கு ஒரு காரணம் என்பதைக் காட்டும் தரவு அரசாங்கத்திடம் உள்ளதா என்று கேட்டிருந்தார்.
கவலையளிக்கும் மேல்நோக்கிய போக்கு
ஊட்டச்சத்துப் பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்புகள், குறிப்பாக லுகேமியா மற்றும் லிம்போமா அதிகரித்து வருவதற்கும் காரணமாகிறது என்று சுல்கெஃப்லி வலியுறுத்தினார்.
“குழந்தைப் பருவப் புற்றுநோய் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன, 2012 மற்றும் 2016 க்கு இடையில் 4,303 நேர்வுகள் பதிவாகியுள்ளன, முதன்மையாக லுகேமியா போன்ற இரத்தப் புற்றுநோய்கள்”.
“இதை நிவர்த்தி செய்வதற்காக, அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, குழந்தை புற்றுநோயியல் நிபுணர்களின் எண்ணிக்கையை அமைச்சகம் அதிகரித்து வருகிறது,” என்று கோலா சிலாங்கூர் எம்.பி. கூறினார்.
முன்னதாக, சுகாதார அமைச்சகம் ஆண்டுதோறும் 40,000 க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய்கள் பதிவு செய்யப்படுவதாகவும், மார்பகம், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் அதிகம் பரவுவதாகவும் தெரிவித்தது.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு மூலோபாயத் திட்டத்தின் மூலம் தடுப்பு மற்றும் ஆரம்பகால பரிசோதனை முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் விரிவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகள், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் பிங்க் அக்டோபர் போன்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அடங்கும் என்றும் சுல்கேஃப்லி கூறினார்.
“2022 ஆம் ஆண்டில் மொத்தம் 40,570 புதிய புற்றுநோய் நேர்வுகளும், 2023 ஆம் ஆண்டில் 38,814 புதிய புற்றுநோய் நேர்வுகளும் பதிவாகியுள்ளன. மார்பகம், பெருங்குடல், நுரையீரல், லிம்போமா, கல்லீரல், புரோஸ்டேட் மற்றும் தைராய்டு புற்றுநோய்கள் ஆகியவை மிகவும் பொதுவான 10 புற்றுநோய்களில் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
பெண்களுக்கு, ஐந்து முன்னணி புற்றுநோய்கள் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கார்பஸ் கருப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஆகும். ஆண்களில், மிகவும் பொதுவானவை பெருங்குடல், நுரையீரல், புரோஸ்டேட், கல்லீரல் மற்றும் லிம்போமா.
முதன்மை தடுப்பு நடவடிக்கைகள்
அதிகரித்து வரும் புற்றுநோய் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு மூலோபாயத் திட்டத்தின் கீழ், சுல்கேப்லி விரிவாகக் கூறினார்.
“ஆரோக்கியமான வாழ்க்கை முறை மேம்பாடு மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட HPV நோய்த்தடுப்பு மூலம் முதன்மைத் தடுப்பு இதில் அடங்கும்”.
“பெரிய அளவிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, இதில் 77,158 நபர்கள் மல மறைமுக இரத்த பரிசோதனை (FOBT) மூலம் பெருங்குடல் புற்றுநோய்க்காகப் பரிசோதிக்கப்பட்டனர். சுமார் 857,722 பெண்கள் மருத்துவ பரிசோதனைகள் அல்லது மேமோகிராம்கள் மூலம் மார்பக புற்றுநோய்க்காகப் பரிசோதிக்கப்பட்டனர்.
“இதற்கிடையில், 410,664 பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பேப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனைமூலம் பரிசோதனை செய்யப்பட்டது. நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் AI- அடிப்படையிலான எக்ஸ்-கதிர்கள் மற்றும் குறைந்த அளவிலான CT ஸ்கேன்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
சிகிச்சையில் முன்னேற்றம்
மரபணுச் சிகிச்சை மற்றும் துல்லிய மருத்துவம், நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் இலக்குச் சிகிச்சை, AI- வழிகாட்டப்பட்ட நோயறிதல்கள் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளிலும் மலேசியா திறனை வளர்த்து வருவதாகச் சுல்கேப்ளி மேலும் கூறினார்.
“நாங்கள் எங்கள் திறனை வளர்த்து வருகிறோம். நான் ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் புற்றுநோய் மையத்தைப் பார்வையிட்டேன், அவர்கள் மிகவும் முன்னேறி இருப்பதைக் கண்டேன். தொழில்நுட்ப அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையில் நாங்கள் பின்தங்கியிருக்காமல் இருக்க, எங்கள் நிபுணர்கள் அங்குப் பயிற்சி மற்றும் இணைப்புகளைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
மலேசியா இன்னும் புரோட்டான் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை வழங்கவில்லை என்றாலும், நுரையீரல் சுகாதார முயற்சி போன்ற முயற்சிகளில் MRI மற்றும் குறைந்த அளவிலான CT ஸ்கேன்கள் போன்ற மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சுல்கேப்லி குறிப்பிட்டார்.

























