புக்கிட் ஜாலில் குடியிருப்பாளர்கள் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் வெளியேற்ற நோட்டீஸ், அவர்களுடைய வீடுகளை உடைப்பது ஆகியவை மீது தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோலாலம்பூர் மேயர் செய்து கொண்ட விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த உத்தரவை தமது அறையில் பிறப்பித்த நீதிபதி டத்தின் ஸாபாரியா முகமட் யூசோப், குடியிருப்பாளர்கள் மேயருக்கு செலவுத் தொகையாக 10,000 ரிங்கிட் கொடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

மேயருக்கு எதிராக வழக்குப் போடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என நீதிபதி கூறியதாக மேயருடைய வழக்குரைஞரான அஸ்மாடி ஒஸ்மான் நிருபர்களிடம் கூறினார்.

நீதிபதி முடிவைத் தொடர்ந்து மேயர் குடியிருப்பாளர்களின் வீடுகளை உடைக்க முடியுமா என வினவப்பட்ட போது, முடியும் என அவர் பதில் அளித்தார். என்றாலும் மேயருடைய அடுத்த நடவடிக்கை என்ன என்பது தமக்குத் தெரியாது என அவர் சொன்னார்.

வழக்குரைஞர்களான கே ரகுநாத்தும் முகமட் அபிக் முகமட் நூரும் குடியிருப்பாளர்களுக்காக வாதாடினார்கள்.

உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து தாங்கள் முறையீடு செய்து கொள்ளப் போவதாக முகமட் அபிக் கூறினார்.

அந்த வழக்கு வெறுப்பூட்டுவது, அற்பத்தனமானது, நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்ற காரணங்களின் அடிப்படையில் அதனைத் தள்ளுபடி செய்யுமாறு மே 27ம் தேதி சமர்பித்த தமது விண்ணப்பத்தில் மேயர் குறிப்பிட்டிருந்தார்.

புக்கிட் ஜாலில் குடியிருப்பாளர்கள் மேயருக்கு எதிராக மார்ச் 14ம் தேதி சமர்பித்த வழக்கில்  சம்பந்தப்பட்ட நிலத்தின் மீது வாதிகளுக்கு சிறப்பு உரிமையும் பங்கும் இருப்பதாக பிரகடனம் செய்யுமாறும் தங்கள் வீடுகளை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் உடைப்பதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மாநகராட்சி மன்றம் தங்களது வீடுகளை உடைப்பதிலிருந்து தடுக்க இடைக்கால உத்தரவு கோரி குடியிருப்பாளர்கள் சமர்பித்த விண்ணப்பத்தை நீதிபதி ஸாபாரியா முகமட் யூசோப்  மே 10ம் தேதி நிராகரித்தார்.

நேற்று தடை உத்தரவுக்கு எதிராக அவர்கள் செய்து கொண்ட முறையீட்டை முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மொத்தம் 18,000 ஏக்கர் (7,284 ஹெக்டர்) பரப்புள்ள புக்கிட் ஜாலில் தோட்டம் அண்மைய காலமாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து 26 ஏக்கராக (10.5 ஹெக்டர்) குறைந்து விட்டது.

அந்த 26 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி மன்றம் முஸ்லிம் மையத்துக் கொல்லை ஒன்றை கட்டுவதற்காக மாநகராட்சி மன்றம் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறையிடம் வழங்கியுள்ளதாக ஏப்ரல் 27ம் தேதி தடை உத்தரவு மீது நிகழ்ந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

குடியிருப்பாளர்கள், அந்த நிலத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் அல்ல என்பதால் புறம்போக்குவாசிகள் அல்ல என்று குடியிருப்பாளர்களுடைய வழக்குரைஞர் ரகுநாத் கூறினார்.

அந்தத் தோட்டம் தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றிடம் விற்கப்பட்ட பின்னர் அங்கு அவர்கள் சில காலமாகவே அங்கு வசித்து வருவதாக அவர் சொன்னார்.

அதற்குப் பதில் அளித்த அஸ்மாடி, வெளியேற்ற உத்தரவை வெளியிட்டதின் மூலம் மேயர் தமது பொதுக் கடமையைச் செய்கிறார் என்றும் மேயருக்கு எதிரான வழக்குப் பொருத்தமற்றது என்றும் கூறினார்.