வீட்டுக்காவல் விதிமுறைகளை இறுதி செய்யும் சிறைத்துறை: உள்துறை அமைச்சர் தகவல்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் நிபந்தனைபூர்வ மன்னிப்பு முடிவைத் தொடர்ந்து, வீட்டுக்காவலை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உருவாக்கும் இறுதி கட்டத்தில் சிறைத்துறை தற்போது ஈடுபட்டுள்ளது.

மன்னிப்பு வாரிய செயலகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியான் இஸ்மாயில் தெரிவித்தார். இந்த கடிதம் வீட்டுக்காவலை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை நிர்ணயிக்க சிறைத்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

சிறைத்துறை இறுதி கட்டத்தில் உள்ளது, தற்போது அவர்கள் இதனை வரைவு செய்து வருகிறார்கள். நம் நாட்டில் இதற்கு முன்பு இது போன்ற (வீட்டுக்காவல்) முறை இருந்ததில்லை.

மன்னிப்பு வாரிய செயலகத்திடமிருந்து சிறைத்துறைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், சிறைத்துறை எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதற்கான விதிமுறைகளை உருவாக்குவதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும்தான் எங்களது பணி, என்று தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையின் நிகழ்வொன்றை இன்று தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நஜிப் இன்னும் காஜாங் சிறையிலேயே இருப்பதாக சைஃபுதீன் தெரிவித்தார். ஏனெனில், அவர் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றான 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை இன்னும் செலுத்தவில்லை.

கடந்த மாதம், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நஜிப்பிற்கு நிபந்தனையுடனான மன்னிப்பை வழங்கினார். அதன்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவதற்கு உட்பட்டு, ஆகஸ்ட் 23, 2028 வரை அவர் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், நஜிப்பின் தலைமை வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா கூறுகையில், மாமன்னரால் வழங்கப்பட்ட வீட்டுக்காவல் உத்தரவின் கீழ், எஸ்சி இன்டர்நேஷனல் வழக்கு தொடர்பான தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை கோலாலம்பூரில் உள்ள லங்காட் டூட்டா இல்லத்தில் நஜிப் தனது குடும்பத்தினருடன் கழிப்பார் என்று தெரிவித்தார்.

 

 

-fmt