இணையவழி விளையாட்டுகள் மூலம் குழந்தைகளைக் குறிவைக்கும் ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையிலும், ‘ரோப்ளாக்ஸ்’  போன்ற இணையவழி விளையாட்டுகள் மூலம் 12 வயது சிறுவர்களைக் கூட தீவிரவாதிகள் தங்கள் அமைப்பில் சேர்த்து வருவதாக பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் அயோப் கான் மைதீன் பிட்சே தெரிவித்துள்ளார்.

விளையாட்டு தளங்களில் குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் தீவிரவாதிகள், பின்னர் அவர்களைத் தங்களின் தனிப்பட்ட குழுக்களில் இணையுமாறு அழைக்கிறார்கள்; அங்கு அவர்களுக்குத் தாக்குதல்களை எப்படி நடத்துவது என்பது குறித்து கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று புக்கிட் அமானின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் துணைப் பொதுக் காவல் ஆய்வாளர் அயோப் கான் கூறினார்.

சமீபத்தில் காவல் துறையினர் 12, 14 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளைக் கைது செய்தனர். அவர்கள் மற்ற குழுக்களில் சேருவதற்கு முன்பு, முதலில் ‘ரோப்ளாக்ஸ்’ போன்ற விளையாட்டுகள் மூலமாகவே சேர்க்கப்பட்டுள்ளனர். அங்குதான் அவர்களுக்குப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கான கற்பித்தல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மாநாட்டில் அயோப் கான் உரையாற்றினார்.

அப்போது, காவல் துறையினர், ராணுவத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொல்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என இந்தச் சிறுவர்களில் சிலர் நம்ப வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு உதாரணமாக 2024 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட்ட அவர், அதில் 20 அல்லது 21 வயதுடைய இளைஞர் ஒருவர் ‘பராங்’ கத்தியுடன் காவல் நிலையத்தைத் தாக்கி, துப்பாக்கியைப் பறித்துச் சென்றதைச் சுட்டிக்காட்டினார்.

அந்தத் தாக்குதல்காரர் தான் செய்வது சரி என்றும், ஒருவேளை தான் கொல்லப்பட்டால் தியாகியாக மரணமடைவோம் என்றும் நம்பியதாக அயோப் கான் தெரிவித்தார்.

மேலும், 1995 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத ஒழிப்புத் துறையில் தனக்குள்ள அனுபவத்தின்படி, தீவிரவாதிகள் பெரும்பாலும் முக்கிய நீரோட்ட இஸ்லாமிய போதனைகளை நிராகரித்து, தங்களின் சொந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு தவறான விளக்கம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இஸ்லாத்தின் உண்மையான போதனைகளான மிதவாதம் மற்றும் வன்முறையை நிராகரிக்கும் கொள்கைகளைப் பின்பற்றுமாறு முஸ்லிம்களுக்கு அயோப் கான் அவசர வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த காலத்தில் மலேசியாவில் செயல்பட்டு வந்த ஜெமா இஸ்லாமியா தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதக் கொள்கைகள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே விளங்குவதாகக் கூறினார்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கையாளுவதற்கும், இதில் தொடர்புடையவர்களை மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதை உறுதி செய்வதற்கும் மேலும் கடுமையான தடுப்புக் காவல் சட்டங்கள்தேவை என்று அயோப் கான் தெரிவித்தார். இளைஞர்களைத் தீவிரவாத அமைப்புகள் திசை திருப்புவதைத் தடுக்க கல்வியும், பெற்றோரின் கண்காணிப்பும் சம அளவில் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஜனவரி மாதம், 14 வயதுடைய சிங்கப்பூர் சிறுவன் ஒருவன், ‘ரோப்ளாக்ஸ்’ மற்றும் ‘கோர்ப்ளாக்ஸ்’ ஆகிய ஆன்லைன் கேம்களில் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் மற்றும் மரணதண்டனை நிறைவேற்றங்களை மறுஉருவாக்கம் செய்ததைத் தொடர்ந்து, அவன் மீது கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இணையம் வழியாக தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அந்தச் சிறுவன், பயங்கரவாத அமைப்பிற்காகப் போரிட வெளிநாடுகளுக்குச் செல்லவும் விரும்பியதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

-fmt