கத்தி ஏந்திய மாணவன் கூச்சிங் பள்ளியில் தாக்குதல் நடத்தினான்

16 வயதுடைய நபர் கட்டுப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகப் பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கோடாரி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளை நிராகரித்த சரவாக் தற்காலிக காவல் ஆணையர் சைஃபுல்லிசான் இஷாக், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பேனாக்கத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று சரவாக், கூச்சிங்கில் உள்ள ஓர் சர்வதேசப் பள்ளியில் மாணவர் ஒருவர் கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார்.

பரவப்பட்ட வதந்திகளைப் போல அந்த மாணவர் கோடரியைப் பயன்படுத்தவில்லை என்றும், மாறாகப் பேனாக்கத்தியை (penknife) மட்டுமே பயன்படுத்தினார் என்றும் தற்காலிக சரவாக் காவல்துறைத் தலைவர் சைஃபுல்லிசான் இஷாக் தெரிவித்ததாக ‘உத்துசான் சரவாக்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவரிடமிருந்த பேனாக்கத்தியைப் பறிமுதல் செய்ய ஆசிரியர் முயன்றபோது அவருக்குக் காயம் ஏற்பட்டதாகப் பள்ளி நிர்வாகத்தைக் மேற்கோள்காட்டி ‘சினார் ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

16 வயதான அந்த மாணவர் கட்டுப்படுத்தப்பட்டு, தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டதாகப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், அவனுடைய பெற்றோரையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; வேறு யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் இல்லை.

காவல்துறையின் விசாரணையை எளிதாக்கும் வகையில் பள்ளி உடனடியாக மூடப்பட்டது.

இச்சம்பவம் குறித்த மேல் விவரங்களை கூச்சிங் காவல்துறைத் தலைவர் அலெக்சன் நாகா சாபு வழங்குவார் என்று சைஃபுல்லிசான் கூறினார்.