சட்டவிரோத குடியேறிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி வீடுகளை வாடகைக்கு விடுவது, மோதல்கள் மற்றும் ரவுடித்தனம் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் என்று தித்திவாங்சா எம்பி ஜோஹாரி கானி தெரிவித்துள்ளார்.
சில வீடுகளில் அளவுக்கு அதிகமான வாடகைதாரர்கள் தங்கியிருக்கும்போது இத்தகைய பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்து, உள்ளூர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறுவதாக தனது அனுபவத்தின் அடிப்படையில் அவர் கூறினார்.
கம்பங் பாண்டானில் உள்ள ஒரு கிராமம் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதை ஜோஹாரி உதாரணமாகக் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்தில், இப்பகுதியில் வசிக்காத உரிமையாளர்களால் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளில் பல வெளிநாட்டினர் (சட்டவிரோத குடியேறிகள்) வசித்து வந்தனர்.
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் பீல், லக்ஷமணா பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், ‘அவர்கள் பெரிய குழுக்களாக ஒன்றாக வாழ்ந்தனர், இது ரவுடித்தனம் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு வழிவகுத்தது’ என்று ஊடகத்திடம் அவர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறைத் தலைவருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், வாடகைதாரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு வலியுறுத்தி வீட்டு உரிமையாளர்களைத் தொடர்புகொள்வது இதில் அடங்கும் என்றும் ஜோஹாரி கூறினார்.
காவல்துறையுடனான ஒத்துழைப்பின் மூலம், இப்பிரச்சினைகளில் பலவற்றைத் தீர்க்க முடியும். நாங்கள் வீட்டு உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு, அடையாளம் தெரியாத வெளிநாட்டினருக்குத் தங்களது சொத்துக்களை வாடகைக்கு விடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை குற்ற விகிதங்களைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களுக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்களைத் தடுக்கவும் உதவும்.
குற்றங்களைத் திறம்படத் தடுப்பதற்கு, உள்ளூர் மக்களும் சமூகத் தலைவர்களும் காவல்துறைக்குத் தகவல்களை வழங்கி அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கவோ அல்லது குற்றவாளிகளை நேரடியாக எதிர்கொள்ளவோ வேண்டாம் என்று ஜோஹாரி வலியுறுத்தினார்.
உள்ளூர் மக்கள் தங்களை அபாயத்திற்கு உள்ளாக்கிக் கொண்டு, குற்றவாளிகளால் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
அண்டை வீட்டாரைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதன் அவசியத்தையும் ஜோஹாரி வலியுறுத்தினார். ‘நாம் ஏழாவது மாடியில் வசிக்கிறோம், அங்கு 16 வீடுகள் உள்ளன என்றால், நம் அண்டை வீட்டாரை நாம் ஓரளவாவது தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.
மூன்று அல்லது நான்கு நாட்களாக ஒரு அண்டை வீட்டாரை நாம் பார்க்கவில்லை என்றால், அவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும். நாமாகவே அவர்களை அணுக பயமாக இருந்தால், குடியிருப்போர் நலச் சங்கத் தலைவருக்கு நாம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
-fmt
























