செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட துறைகளில், ஒரு சர்வதேச முதலீட்டாளர் சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவில் 5,000 கோடி அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் 20,430 கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற காணொளிக்காட்சி உரையாடலின் போது அந்த முதலீட்டாளர் இந்தத் திட்டத்தை தன்னிடம் தெரிவித்ததாகவும், இது இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர் என்னுடன் காணொளிக்காட்சி மூலம் கலந்துரையாடினார். இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றான, 5,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டிற்குச் சரவாக்கில் உள்ள கூச்சிங் மற்றும் தீபகற்ப மலேசியாவை அவர் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்’ என்று பிரதமர் கூறினார்.
பல்கலைக்கழகங்களிலும் பள்ளிகளிலும் படிக்கும் இளைஞர்கள், இது தங்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று மலாக்காவில் செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சாதகமான சூழலை உறுதி செய்வதன் மூலம், மலேசியா மீதான சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
இவ்வரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலோ, அல்லது இதன் தலைவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தாலோ, முதலீட்டாளர்கள் இங்கு வர ஆர்வம் காட்ட மாட்டார்கள்’ என்று அவர் கூறினார்.
மலேசியாவின் பல்லின மற்றும் பல மத சமூகங்களுக்கு இடையிலான அமைதியும் நல்லிணக்கமும் நாட்டின் முக்கிய பலங்களில் ஒன்றாகும் என்றும், அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இதனை ஒரு சாதகமான காரணியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் மலேசியா தனது திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதலீடுகளை ஈர்ப்பதிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கிடைக்கும் வெற்றியானது, சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட மக்களின் உண்மையான பலன்களாக மாற்றப்பட வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.
-fmt
























